/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'மினியேச்சர்'களை பலரும் விலைக்கு கேட்கின்றனர்!
/
'மினியேச்சர்'களை பலரும் விலைக்கு கேட்கின்றனர்!
PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

சிறிய, 'மினியேச்சர்' பொருட்களை, கலைநயத்துடன் செய்து வரும், சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த சாரதா: பொறியியல் படித்து, 10 ஆண்டுகள் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து, அதிலிருந்து விலகினேன். 'இன்ஜினியரிங் டிராயிங்' படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அதனால் தான் இந்த ஐடியா தோன்றியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கொலுவில் வைப்பதற்காக சொப்பு சாமான்களை பித்தளை, பீங்கான், மாக்கல் என்று தேடித் தேடி வாங்கினேன்.
ஆனால், அவற்றையெல்லாம் வெறுமனே கொலுப்படிகளில் வைப்பதைவிட, அதற்குரிய பொருத்தமான ஒரு கட்டுமானத்தில் அழகாக பார்வைக்கு வைக்கலாமே என்று தோன்றியது.
அப்படி சின்னச் சின்ன பித்தளை சொப்பு சாமான்களை, 'டிஸ்ப்ளே' செய்ய, முற்றத்துடன் கூடிய மினியேச்சர் வீட்டை உருவாக்க நினைத்தேன். அப்போது துவங்கியது தான், இந்த மினியேச்சர்கள் செய்யும் ஐடியா.
முதலில் ஒன்று செய்து பார்த்தபோது, 'இதே போல, இன்னும் விதவிதமான தீம்களை உருவாக்கலாமே' என்ற ஐடியா உதித்தது.
துணிக்கடை, சின்ன பலசரக்கு கடை, வாசிக்கும் அறைகளில் வைக்க, துணிமணிகள், காய்கறிகள், டைனிங் டேபிள், அலமாரிகள் என்று, என் கற்பனை சிறகுகள் பலமடங்கு விரிந்தன.
நீண்டகாலம் பத்திரமாக வைத்துக்கொள்ள, உறுதியான மூலப்பொருட்களில் செய்ய வேண்டும்.
அதை முழுதாக ஒரே துண்டாக செய்யாமல், சின்ன இடத்திலும் பாதுகாத்து வைத்து, தேவையானபோது எளிதாக 'அசெம்பிள்' செய்து கொள்ளும்படி, முடிந்தவரை சின்னச் சின்ன பாகங்களாக செய்ய வேண்டும். அப்படி யோசித்து, 'டிசைன்' செய்வது எனக்கு தனி சந்தோஷத்தையும், திருப்தியையும் தருகிறது.
தற்போது செய்திருக்கும் மினியேச்சர் மாடல்களில் சின்ன சின்ன பர்னிச்சர்கள், ஊஞ்சல், சாய்வு நாற்காலி, டேபிள், சேர், அலமாரிகள், வெவ்வேறு டிசைன்களில் கூரைகள், துாண்கள், சுவர்கள் என்று எல்லாமே மூங்கில் பட்டைகள், சாப்ஸ்டிக்ஸ், மரப்பலகைகள், மரக்குச்சிகள் கொண்டே செய்யப்பட்டவை.
அவற்றை கலரிங் செய்யும் போது கொஞ்சம் பெயின்டிங் குறித்த அறிவும் வளர்ந்தது. வுட் பாலிஷ், அக்ரிலிக் பெயின்ட் என்று ஒவ்வொரு பாகத்திற்கும் தகுந்தவற்றை உபயோகித்து, கலர் செய்தேன்.
இது தவிர, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஒரு சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளேன். இசையிலும், பாடுவதிலும். ஆர்வம் உண்டு.
என்னுடைய மினியேச்சர்களை பார்க்கும் பலரும், விலைக்கு கேட்கின்றனர். எனவே, சிறிய அளவில் தொழிலாக மாற்றலாம் என, முயன்று வருகிறேன். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப, 'கஸ்டமைஸ்டு' பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.