/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கப்பலில் வேலைக்கு சேரணும்கிறது என்னோட கனவு!
/
கப்பலில் வேலைக்கு சேரணும்கிறது என்னோட கனவு!
PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியில் நடந்து வரும் சமையலுக்கான, 'கலினரி ஒலிம்பிக்ஸ்'சில் -------இந்தியா சார்பில், முதன் முறையாக தங்கப் பதக்கம் வென்ற, சென்னையில், பி.எஸ்சி., ஹோட்டல் மேலாண்மை இரண்டாம் ஆண்டு படிக்கும் ஸ்ரேயா அனீஷ்: கேரளாவில், கலமசேரி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமத்தைச் சேர்ந்தவள் நான்.
நாங்க மிடில் கிளாஸ் பேமிலி. -ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போறேன்னு சொன்னப்ப வீட்டில் சம்மதிக்கவில்லை. ஒருவழியாக அவங்களுக்கு புரியவெச்சு, கோர்சில் சேர்ந்தேன்.
என்னோட குரு, செப் கார்விங் கார்த்திக், டில்லியில் நடக்கவிருந்த காய்கறிகளில் விதவிதமான டிசைன்களை வடிவமைக்கும், 'கார்விங்' போட்டிக்கு டிரெயினிங் கொடுத்துட்டு இருந்தாரு.
நானும் அந்த போட்டிக்கு தயாராக துவங்கினேன். ஆனால், முதல் போட்டியில் நான் ஜெயிக்கவில்லை. சோர்ந்து போகாமல் அடுத்த போட்டிக்கு தயாரானேன்.
அதன் பலனாக டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியிலும், அடுத்து நடந்த மலேஷியா போட்டியிலும் வெண்கலம் கிடைத்தன.
பிப்ரவரி முதல் வாரத்தில், ஜெர்மனியில், கலினரி ஒலிம்பிக்ஸ் போட்டி நடந்தது. அந்த நாட்டு கிளைமேட் ஒத்துக்கலை. நம்ம ஊரில் கிடைக்கிற காய்கறிகள் கிடைக்கவில்லை, இப்படி நிறைய பிரச்னைகள் இருந்தன. மனதைத் தளரவிடாமல் முயற்சி செய்தேன்.
போட்டியோட முதல் ரவுண்டில் என்னால் நல்லா கார்விங் செய்ய முடியவில்லை. ஜூரி என்கிட்ட, 'இந்தியர்களுக்கு சுத்தம் என்ற விஷயமே வராது. இருந்தாலும் இன்னும் ஒரு நாள் இருக்கு.
'நல்லா பிராக்டிஸ் பண்ணு'ன்னு சொன்னாங்க. அப்போது தான் அவங்க சுத்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு புரிந்தது. எல்லாத்தையும்விட, இந்தியர்கள் மேல் அவங்களுக்கு இருந்த கண்ணோட்டத்தை மாற்ற நினைத்தேன்.
அன்னிக்கு முழுக்க கடுமையாக பயிற்சி எடுத்தேன். அடுத்த நாள் நான் கார்விங் பண்றதைப் பாத்துட்டு ஜூரி என்னோட செப்கிட்ட, 'நாங்க நேத்து சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறோம். ஸ்ரேயா நன்றாக செய்கிறாள்' என கூறியுள்ளனர்.
நான் முள்ளங்கி, பூசணிக்காய்ன்னு அஞ்சு காய்கறிகளில் சின்ன சின்ன டிசைனில் பூ கார்விங் செய்திருந்தேன்.
என்னோட கார்விங்குக்கு, நுாற்றுக்கு நுாறு மார்க் கொடுத்ததோட மட்டுமில்லாமல், மத்தவங்களுக்கு என்னோட கார்விங்கை மாடலாகவும் காட்டுனாங்க. எனக்கும் கோல்டு மெடல் கிடைத்தது.
இப்படி 124 ஆண்டு வரலாறு கொண்ட கலினரி ஒலிம்பிக்சில், இந்தியாவுக்கு முதன் முதலாக கிடைத்திருக்கும் தங்கம் இது. கப்பலில் வேலைக்கு சேரணும்கிறது தான் என்னோட கனவு.

