PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

கண்ணாடியில் ஓவியங்கள் தீட்டுவது பற்றி கூறுகிறார் நீலவேணி: மத்திய அரசின் சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றுள்ள எனக்கு சொந்த ஊர் வேலுார்.
சாதாரணமாக காகிதத்தில், பலகையில் ஓவியங்கள் வரைவது பற்றி நாம் அறிந்திருப்போம். அரிதாக சிலருடைய விரல்களுக்கு, கண்ணாடியில் சித்திரம் தீட்டுவது அத்துபடியாகியிருக்கும்.
பள்ளியில் படித்தபோது சின்னதாய் ஒரு விருப்பம், ஓவியங்களின் மீது படிந்தது. கரும்பலகைகளில் சின்னச் சின்ன படங்களை வரைவது, அழகான கையெழுத்தில் பொன்மொழிகள், பழமொழிகள் போன்றவற்றை எழுதி வைக்க, என் ஆசிரியர்கள் எனக்கு உத்வேகமாக இருந்தனர்.
அதே சமயம், படிப்பிலிருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதில் வீட்டினர் மட்டுமல்ல; நானும் உறுதியாக இருந்தேன். படிப்புக்கு அப்பாற்பட்டுதான் இந்த நுண்கலைகளில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது.
என் பள்ளி, கல்லுாரி நாட்களும், என் வீட்டுச் சூழலும், என் விருப்பத்துக்கு தடையாக இல்லாததால், என்னால் தொடர்ந்து ஓவிய விருப்பத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
கடந்த, 2004-ல் சென்னையில் நடைபெற்ற ஓவியப் பயிற்சிப் பட்டறையில் ஓவியங்கள் வரைவதற்கான அடிப்படை நுணுக்கங்கள் மட்டுமே சொல்லிக் கொடுத்தனர்.
அதை ஒரு தொடக்க புள்ளியாக வைத்து கொண்டு, நாம் தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
எனது இந்த புரிதலின் தொடர்ச்சியாக, கண்ணாடி ஓவியங்கள் மட்டுமல்ல, துணிகளில் அழகான சித்திரங்களை தீட்டுவது, கண்ணாடி தொட்டிகளில் ஓவியங்கள் வரைவது என, என் விருப்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டேன்.
ஓவியர் மாருதி என்னிடத்தில், 'ஓவியங்களை வரைந்து உங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க கூடாது. உங்கள் கண்ணாடி ஓவியங்களை வைத்து ஓர் ஓவியக் கண்காட்சி நடத்துங்கள்' என்றார்.
அவருடைய அன்பான ஆலோசனையோடு, 2014-ல், சென்னையில் புகழ்பெற்ற ஒரு ஹோட்டலில், நான் வரைந்த, 40 ஓவியங்களை, 'ஆர்ட் எக்ஸிபிஷன்' வைத்தேன். தொடர்ந்து, 15 நாட்கள் அந்தக் கண்காட்சி நடந்தது . தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து, பாராட்டினர்.
நான் பார்த்தது, உணர்ந்தது, சிந்தித்தது, நடந்தது என அனைத்தையும் எழுதினேன். அந்தப் பதிவுகளை, 'பயணங்களில் உலவும் வாழ்க்கை' எனும் நுாலாகக் கொண்டு வந்தேன். பலருடைய பாராட்டுதலையும் அந்த நுால் பெற்றது.
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பதை போல, உங்களுக்கு இயல்பாகவே ஓவியக்கலையின் மீது அடங்காத ஆசையும், ஓவியம் வரையும் திறனும் இருந்தால், கண்ணாடி ஓவியங்கள் வரைந்து அசத்தலாம்!

