/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை!
/
'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை!
PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

பனம்பழ நாரை, பருத்தியுடன் கலந்து ஆடைகள் தயாரித்து, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள, திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியைச் சேர்ந்த டெக்ஸ்டைல் துறை பட்டதாரி சுரேஷ்குமார்:
முன்னாடி இங்க நிறைய பனை மரங்கள் இருந்ததால் இந்த இடத்திற்கு பனைமரத்தான் தோட்டம் என்ற பெயர் இருந்தது. நான் 10ம் வகுப்பு முடித்த சமயத்தில், டெக்ஸ்டைல் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியில் இருந்துச்சு. அதனால், டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமா படித்தேன்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்தபடியே, அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் டெக்ஸ்டைல் பட்டப்படிப்பு படித்தேன்.
பனையை பாதுகாக்கவும், புதிதாக வளர்த்தெடுக்கவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல முன்னெடுப்புகள் செஞ்சுகிட்டு இருக்காங்க. அது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, இந்த விஷயத்தில் என்னால் முடிந்த பங்களிப்பு செய்யணும் என்ற எண்ணத்தில் பனம்பழ நார்களை, பருத்தியுடன் சேர்த்து நுாலிழை தயார் செய்து, ஆடை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கினேன்.
இது சாத்தியம் தானான்னு பலருக்கும் சந்தேகம் எழலாம். சமீபகாலமாக டெக்ஸ்டைல் துறையில் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க.
பனம்பழத் தோலை நீக்கினால், சதையும், நார்களும் இருக்கும். அவற்றை தண்ணீரில் அலசினால் நார்களும் தனியாக வந்து விடும்.
அந்த நார்களை என்சைமில் போட்டு பதப்படுத்தி, அதை பருத்தியுடன் சேர்த்து மிஷின் வாயிலாக நுாலிழை தயார் செய்து, வழக்கமான டெக்ஸ்டைல் மிஷின்கள் வாயிலாக துணி உற்பத்தி செய்து, ஆடைகள் தயார் செய்தேன். தற்போது 80 சதவீத பருத்தியும், 20 சதவீத பனம்பழ நாரும் கலந்து ஆடைகள் தயார் செய்துள்ளேன்.
கடந்த 2023ல், லண்டனில் நடந்த சூழலுக்கு உகந்த எதிர்கால துணி வகைகளுக்கான சர்வதேச கண்காட்சியில், பனை நார் ஆடைகளை காட்சிப்படுத்தினேன்.
வெளிநாடுகளைச் சேர்ந்த டெக்ஸ்டைல் வல்லுனர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததுடன், 'பேஷன் போர்காஸ்டிங்' என்ற அமைப்பினர் என்ன மாதிரியான தேவைகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஆய்வுகள் செய்து, பனை நார் ஆடைகளை அங்கீகரித்து, இது டெக்ஸ்டைல் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு செய்யும் என ஆவணப்படுத்தினர்.
நான் தயார் செய்த ஆடைகளில் ஆன்டி பாக்டீரியாக்கள் அடங்கியிருக்கு என, மும்பையில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கு.
இந்த ஆடைகளுக்கு தேவையான நிறங்களுக்கு கூட ரசாயனம் பயன்படுத்தவில்லை. தாவரங்களில் இருந்து தயார் செய்யப்படும் நிறமூட்டிகளை தான் பயன்படுத்தி இருக்கேன்.
தொடர்புக்கு:
99865 59476.

