PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

துணை கலெக்டர் பதவிக்கு வந்துள்ள துப்புரவு தொழிலாளி ஆஷா கந்தாரா, எப்படி இந்த பதவியை பெற்றார் என கூறுகிறார்:
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினேன். திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் கழித்து, என் கணவர் என்னை கைவிட்டார்.
ஒற்றை தாயாக தன்னம்பிக்கையுடன், இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினேன். என் லட்சியம், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது தான். ஆனால், அதற்கான வயது வரம்பை கடந்து விட்டதால், மத்திய அரசின், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத முடியவில்லை.
ராஜஸ்தான் மாநில அரசு தேர்வில் பங்கேற்று, 728-வது இடத்தை பிடித்த நான், தற்போது, ஜோத்பூர் நகர் நிகாம் அமைப்பின் துணை கலெக்டர் அந்தஸ்துடைய பதவியில் உள்ளேன்.
என் மீது மற்றவர்கள் வீசும் கற்களை வைத்து, துயரங்களை கடக்கும் பாலம் அமைத்தேன். என் வெற்றி, பலராலும் கொண்டாடப்பட்டது.
மேயர் மற்றும் மூத்த அதிகாரிகள் என்னை பாராட்டி மகிழ்ந்தனர். அவர்களோடு சரிசமமாக அமர்ந்தபோது, பெருமிதம் பொங்கும் ஓர் உணர்வை அனுபவித்தேன்.
எனக்கு, 1997ல் இளம் வயதிலேயே திருமணமாகி விட்டது; 2002லேயே, கணவர் என்னை விட்டு விலகி விட்டார். அப்போது பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த நான், 2016ல் பட்டப்படிப்பை முடித்தேன்.
அதன் பின், பெற்றோருக்கு உதவியாக இருப்பதற்காக, தயக்கம் ஏதுமின்றி, ஜோத்பூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளியாக பணியில் சேர்ந்தேன்.
பொருளாதார சுதந்திரம் பெற்று, சொந்தக் காலில் நின்று, என் குழந்தைகளை நானே வளர்க்க வேண்டும் என்பது தான் என் லட்சியம்.
அந்த சமயத்தில் தான், நான் ஏதாவது ஒன்றைக் கேட்டால், 'நீ ஒன்றும் கலெக்டர் அல்ல...' என்று எகத்தாளமான பதிலை, பலமுறை, பலரிடமிருந்து எதிர்கொண்டேன். நான் சார்ந்த சமூகம் மற்றும் நான் செய்யும் தொழில் ஆகியவற்றின் காரணமாக, மிக ஏளனமாக நடத்தப்பட்டேன்.
என் பயணம், மிகவும் கடுமையானது. நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்.
எனவே, இப்போது பெற்றுள்ள இந்த பதவி வாயிலாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அநீதிக்குள்ளான மக்களுக்காகவும் என்னாலானதை செய்வேன்.
சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள், குறிப்பாக, கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. உங்களுக்கான லட்சியங்களை அமைத்து கொள்ளுங்கள்.
அவற்றை சாத்தியமாக்க உறுதி பூணுங்கள். கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை ஆகியவை இருந்தால், வெற்றி நிச்சயம். என்னாலே சாதிக்க முடிந்திருக்கிற போது உங்களால் முடியாதா என்ன?

