/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
லாபமும், நஷ்டமும் விவசாயி கையில் தான் இருக்கிறது!
/
லாபமும், நஷ்டமும் விவசாயி கையில் தான் இருக்கிறது!
PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

ராணிப்பேட்டை மாவட்டம், வேலம்புதுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன்:
என்னிடம் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. கல் பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதுடன், களை, பூச்சி தாக்குதல் இல்லாமல் காய்கறி சாகுபடி செய்யலாம் என்று தெரிந்து கொண்டேன்.
அதனால், மூன்று ஆண்டுகளுக்கு முன், 50 சென்ட் நிலத்தில் 200 கல் கம்பங்கள் நட்டு, 1 டன்னுக்கு மேல் எடையுள்ள இரும்பு கம்பிகள் கட்டி பந்தல் அமைத்தேன். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, 1 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது.
சுரைக்காய், பாகற்காய், புடலை, பீர்க்கங்காய் என நான்கு வகையான காய்கறிகளை கல் பந்தலில் சாகுபடி செய்து வருகிறேன். மீதியுள்ள நிலத்தில் நெல், பப்பாளி மற்றும் காய்கறி வகைகளும் பயிரிட்டு வருகிறேன்.
காய்களை பறித்து, இருசக்கர வாகனத்தில் ஏற்றி மக்கள் கூடும் இடங்களிலும், சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்கிறேன். இடைத்தரகர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்க மாட்டேன்.
சந்தையில் 1 கிலோ 30 ரூபாய் எனில், கூடுதலாக 10 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்கிறேன். ஒரு அறுவடைக்கு சராசரியாக 4 டன் காய்கறிகள் கிடைக்கும்.
கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். விற்பனைக்கு கொண்டு சென்ற காய்கறிகளை திரும்பவும் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. அது போன்ற நேரங்களில் 20 ரூபாய்க்கு கூட கொடுக்கிறேன்.
அந்த வகையில், சராசரியாக 30 ரூபாய் என கணக்கில் எடுத்துக் கொண்டால், 1.20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் விதைகள், எரு, இடு பொருட்கள், போக்குவரத்து என 40,000 ரூபாய் செலவாகும். 80,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆண்டுக்கு இரு முறை கல் பந்தல் சாகுபடி வாயிலாக, 1.60 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.
இது தவிர நெல், வெண்டை, அவரை சாகுபடி வாயிலாக, ஒவ்வொன்றிலும் 50,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்வதன் வாயிலாக, கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் இந்த 2.5 ஏக்கர் வாயிலாக கிடைத்து வருகிறது.
நாங்கள் வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை. குடும்பமே சேர்ந்து பாடுபடுவதால் தான் இந்த லாபம் கிடைக்கிறது. சந்தைக்கு காய்கறிகளை கொண்டு சென்று விற்பதற்கு, 7 லட்சம் ரூபாயில் ஒரு ஆம்னி கார் வாங்கியிருக்கிறேன்.
புது வீடு கட்டி, சந்தோஷமாக இருக்கிறோம்; புதிதாக நிலமும் வாங்கியுள்ளேன். விவசாயத்தில் லாபம் வருவதும், நஷ்டம் வருவதும் விவசாயி கையில் தான் இருக்கிறது.
தொடர்புக்கு:
78459 15190