/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மற்றவர்களை மகிழ்விப்பதே பெரிய இன்பம்!
/
மற்றவர்களை மகிழ்விப்பதே பெரிய இன்பம்!
PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

பொன்னாடைகளை புத்தாடைகளாக தைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக தரும், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா லிங்கேஸ்வரன்:
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சிறுவயது முதலே தையலிலும், கைவினை வேலைப்பாடுகளிலும் ஆர்வம் உண்டு. அதனால், முறைப்படி அவற்றை கற்றுக் கொண்டேன்.
ஆர்வம், ஈடுபாடு, 'கிரியேட்டிவிட்டி'யால் நான் தைத்துக் கொடுக்கும் உடைகள் நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டுவர்.
கைம்பெண்கள், சிங்கிள் மதர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் ஆகியோருக்கு தையல் கற்றுக் கொடுத்தால், தங்கள் சொந்தக்காலில் நிற்பர் என்ற நோக்கத்துடன், இலவசமாக கற்றுக் கொடுக்கத் துவங்கினேன்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்றும் கற்றுக் கொடுத்தேன். இதன் வாயிலாக, பலருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டதால் திருப்திஅடைந்தேன்.
இது ஒருபுறமிருக்க, 'தையல் மற்றும் கைத்திறன் பயிற்சியாளர், மோட்டிவேஷனல் பேச்சாளர், சுயதொழில் முனைவோர், சமூக சேவகி' என்ற முறையில், ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.
அப்போதெல்லாம் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், எனக்கு பொன்னாடைகள் போர்த்தி கவுரவிப்பர். ஒரு கட்டத்தில், ஏராளமான பொன்னாடைகள் குவிந்து விட்டன; அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை.
அப்போது தான் இந்த யோசனை தோன்றியது. நம்மிடம் இருக்கும் பொன்னாடைகளில், பளபளக்கும் பாவாடை - சட்டை, கவுன்கள் தைத்து, ஏழை சிறுவர் - சிறுமியருக்கு கொடுத்தால், அவர்கள் மிகுந்த சந்தோஷப்படுவரே என்று நினைத்து, அவ்வாறே செய்து கொடுத்தேன். அப்போது, அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
என் நண்பர்களிடமும் இதுகுறித்து தெரிவித்தேன். அவர்களும், தங்களுக்கு கிடைத்த பொன்னாடைகளை எனக்கு கொடுத்தனர்.
அவற்றை பயன்படுத்தி புத்தாடைகள் தைத்து, எனக்கு பொன்னாடைகள் கொடுத்தவர்களை வரவழைத்து, அவர்கள் கையாலேயே குழந்தைகளுக்கு கொடுக்க வைத்தேன்.
அப்போது அவர்கள், 'எங்களிடம் பயன்படாமல் இருந்த பொன்னாடைகளில், புதுமையான உடைகள் தைத்துக் கொடுத்து, இந்த குழந்தைகளை சந்தோஷப்படுத்த, எங்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாயே' என்று பாராட்டினர்.
பல குழந்தைகள், அந்த உடைகளை அணிந்தபடி விசேஷங்களுக்கு செல்லும்போது, மகிழ்ச்சியுடன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு செல்வர்.
மற்றவர்களை மகிழ்விப்பதன் வாயிலாகக் கிடைக்கும் இன்பம், மற்ற எல்லா வகையான சந்தோஷங்களையும் விட மிகவும் உசத்தி!

