/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நான் சாப்பிடும் சாப்பாட்டை முதல்வர் தான் போடுறார்!
/
நான் சாப்பிடும் சாப்பாட்டை முதல்வர் தான் போடுறார்!
நான் சாப்பிடும் சாப்பாட்டை முதல்வர் தான் போடுறார்!
நான் சாப்பிடும் சாப்பாட்டை முதல்வர் தான் போடுறார்!
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்ற அதே முக அமைப்பு, ஹேர் ஸ்டைல், பெரிய காலர் வைத்த சட்டை, வேட்டியுடன் வலம் வரும் சேலம் செய்யது:
எனக்கு சேலம் தான் சொந்த ஊர். நான் பார்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் போன்று இருப்பதால், சேலம் மக்கள் என்னை, 'ஸ்டாலின் செய்யது' என்று தான் கூப்பிடுவர். எனக்கு 51 வயதாகிறது. ஆரம்பத்தில் ஸ்டேஜ் டான்சராக இருந்தேன்; அதன்பின் ரஜினி, 'கெட் அப்' போட்டு நடித்தேன்.
அந்நேரத்தில் ஒருவர், 'நீ பார்க்க ஸ்டாலின் மாதிரி அப்படியே இருக்க' என்றார். அடுத்தடுத்து பலர் அது போன்று சொல்லவே, சரி என நானும் ஸ்டாலின் ஐயா கெட் அப் போட்டேன்; அது பயங்கரமா, 'பிக் அப்' ஆகிடுச்சு. அது முதல், கடந்த 15 ஆண்டுகளாக இந்த கெட் அப்பிலேயே வாழ்ந்துட்டு இருக்கேன்.
ஸ்டாலின் எப்படி பேசுவாரு, நடப்பாரு, சிரிப்பாரு; எப்படி கையெடுத்து கும்பிடுவாரு; மேடைக்கு வந்தா தொண்டர்களுக்கு எப்படி கை காட்டுவாருன்னு ஒவ்வொரு அசைவையும், 'டிவி'யில் கவனித்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பாடி லாங்குவேஜையும் உள்வாங்கி நடித்து பார்த்தேன்.
தி.மு.க., பிரசார மேடைகளுக்கு என்னை அழைப்பர். சில இடங்களில் உட்கார்ந்து இருக்கும் கட்சிக்காரங்க என்னை பார்த்ததும் எழுந்து நிற்பர்; பட்டாசு வெடிப்பர்; வரிசையாக வந்து சால்வை, மாலை போடுவர். வயதானோர் அவர்கள் கஷ்டத்தை சொல்லி என்னிடம் மனு கூட கொடுத்துள்ளனர்.
ஒரு முறை பாட்டி ஒருவர் என்னை திடீரென்று கட்டிப் பிடித்து, 'ஸ்டாலின் தம்பி' என்று அழுதுவிட்டார். 'நான் அவரு இல்லை; டூப்' என்று எவ்வளவு முறை சொல்லியும், அவர் நம்பவே இல்லை.
சொந்தமாக கால் டாக்சி வைத்துள்ளேன். அப்பப்ப சவாரிக்கும் போவேன்; ஆனால், அதில் கிடைக்கும் வருமானத்தை விட, இந்த கெட் அப்பில் தான் நன்கு சம்பாதிக்கிறேன். இது தான் எங்கள் குடும்பத்துக்கு முக்கிய வருமானமே. உண்மையை சொல்லணும்னா, நான் சாப்பிடுற சாப்பாட்டை முதல்வர் தான் போடுறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோவாக நடிக்கிற, அமரன் படத்தில் நடித்திருக்கிறேன். அதில் ஒருவர் இறந்து விடுவார்; அவருக்கு முதல்வர் மலர் வளையம் வைத்து, இரங்கல் தெரிவிக்கிற மாதிரி ஒரு காட்சியில் நடித்தேன். ஒரு மணி நேரம் என்னை வைத்து எடுத்தாங்க; 8,000 ரூபாய் கொடுத்தாங்க. மற்றபடி சின்ன சின்ன குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.
தி.மு.க., சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தான் அதிகம் வரும். ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், 5,000 ரூபாய் கிடைக்கும். மனைவியின் சொந்த ஊர் கேரளா. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். அங்கும், 'தமிழ்நாடு சி.எம்., வந்திருக்கார்'னு வதந்தி கிளம்பிடுச்சி. நான் செல்லும் இடமெல்லாம் இப்படி ஏதாவது நடக்கும்.