/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தார்ப்பாலின் கிணறு அமைக்க மானியம் உண்டு!
/
தார்ப்பாலின் கிணறு அமைக்க மானியம் உண்டு!
PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

நீலகிரி மாவட்டம், கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்த விவசாயி ரஜினிகாந்த்:
நீலகிரியில், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மலை காய்கறிகள் சாகுபடி, இன்றைக்கு நீலகிரி பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
கிட்டத்தட்ட 15,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் மலை காய்கறிகள் சாகுபடியில், 1 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மலையின் உயரமான பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளில் நானும் ஒருவன். கீழேயுள்ள சமதளப் பகுதியில் அமைந்திருக்கிற நீரோடையில் இருந்து, 300 மீட்டர் உயரத்தில் என் தோட்டம் அமைந்திருக்கிறது.
டீசல் இன்ஜின் வாயிலாக நீரோடையில் இருந்து தண்ணீரை மேலே கொண்டு வந்து, காய்கறி செடிகளுக்கு பாய்ச்சுவது ரொம்ப சிரமம்; அதனால், மழையை நம்பி ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே காய்கறிகள் சாகுபடி செய்து வந்தேன்.
இந்த சூழலில் தான், தார்ப்பாலின் வாயிலாக செயற்கை கிணறு அமைக்கும் முறை குறித்து கேள்விப்பட்டேன். இந்த கிணறுகள் வாயிலாக பல விவசாயிகள் ஆண்டு முழுதும் சாகுபடியில் ஈடுபடும் விஷயம் தெரியவந்தது.
அவர்களை சந்தித்து பேசியதில், 'தார்ப்பாலின் கிணற்றில் தண்ணீர் சேமித்து, பல வாரங்களுக்கு வைத்திருந்தாலும், அதன் அளவு குறைவதே இல்லை; தேவைக்கேற்ப பாய்ச்ச முடியும்' என்றனர்.
அதனால், என் தோட்டத்திலும் அதை அமைத்தேன். இதனால் ஆண்டு முழுக்க காலிபிளவர், முட்டைகோஸ், பூண்டு உள்ளிட்ட அனைத்து விதமான மலை காய்கறிகளும் சாகுபடி செய்து வருகிறேன்.
கிட்டத்தட்ட 60 அடி நீளம், 50 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட கிணறு ஏற்படுத்த, அதன் தரைப்பகுதி மற்றும் உள்சுற்று பகுதிகளில் தார்ப்பாலின், 'ஷீட்' அமைத்தோமானால், தார்ப்பாலின் கிணறு தயார்.
அதில் தண்ணீரை சேமித்து, தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்; இதில் மழை நீரையும் சேமிக்கலாம்.
தார்ப்பாலின் ஷீட் வாங்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு கிழிசல் கூட இருக்க கூடாது; இதில் அதிக கவனம் தேவை. ஷீட் மேல் தண்ணீர் நிரப்பப்படுவதால், பல நாட்களானாலும் தண்ணீரை நிலம் உறிஞ்சாது; அதன் அளவும் குறையாமல் அப்படியே இருக்கும்.
தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க, கிணற்றின் மேல்பகுதியில் தார்ப்பாலின் ஷீட்டை போட்டு மூடி வைத்து விடலாம்.
இந்த கிணற்றில் மீன், வாத்து வளர்த்து அதன் வாயிலாகவும் பயன் பெறலாம். இந்த கிணறு அமைக்க, தோட்டக்கலை துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது.