PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

பொருளாதார வல்லுநர் நாகப்பன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 1 கிராம் தங்கம், 400 ரூபாய்; இன்று, 8,010 ரூபாய். தங்கம் இயற்கையாக கிடைக்கும் அரிய பொருள். குறைந்த அளவுதான் கிடைக்கிறது.
அதனால், எப்போதுமே அதற்கு தட்டுப்பாடு இருக்கிறது. இந்த மூன்றும் தான் தங்கத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.
உலக அளவில் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவது இரண்டு விஷயங்கள். ஒன்று அமெரிக்க டாலர், இன்னொன்று தங்கம்.
தங்கத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் சில சிக்கல்கள் இருப்பதால், உலக வணிகப் பரிவர்த்தனை பெருமளவில் டாலரை வைத்தே நடக்கிறது.
டாலரை மதிப்பிழக்க செய்யும் வகையில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட, 'பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பு, 'பிரிக்ஸ் கரன்சி'யை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.
இதனால் ஆத்திரமுற்ற டிரம்ப், 'நீங்கள் என்ன செய்வது... நானே டாலரின் மதிப்பைக் குறைத்து, உங்களை வீழ்த்துகிறேன் பாருங்கள்' என்று கிரிப்டோ கரன்சி பக்கம் திரும்பினார். அவர் வெளியிட்ட, டாலர் டிரம்ப் மீம் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு, சில தினங்களிலேயே, 'ஜிவ்'வென்று மேலே ஏறி விட்டது.
இதனால் பதற்றமடைந்த நாடுகள், டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் பெருமளவு வாங்க துவங்கி விட்டன. அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்துக்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதுதான் தற்போதைய விலை உயர்வுக்கு அடிப்படை காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலைகளில் செயற்கையாக வைரம் தயாரிக்கத் துவங்கினர். அந்த வைரம் சந்தைக்கு வந்ததும், இயற்கை வைரத்தின் விலை, 25 சதவீதம் இறங்கி விட்டது.
வழக்கமாக வைரத்தின் விலை ஆண்டுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் ஏறும்; அதுவும் நடக்கவில்லை. வைரம் வாங்கி வைத்திருந்தவர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீதம் இழப்பு.
தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் செயற்கை தங்கம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது நாடுகளும், மக்களும் தங்கம் வாங்கிக் குவிப்பதை குறைக்க வேண்டும். இப்போதைக்கு இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை.
'டிஜிட்டல் கோல்டு' என்று ஒரு வணிகம் இணையத்தில் பெரிதாக நடக்கிறது; அது யாருடைய கண்காணிப்பின் கீழ் வருகிறது என்பது பெரிய கேள்வி.
பெரிய 'ரிஸ்க்' இதில் இருக்கிறது. பலர் நகைச்சீட்டு கட்டுகின்றனர். உங்களுக்கு நம்பகமான நிறுவனம் எனில், தாராளமாக கட்டலாம்.