/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எல்லாருக்கும் முன்னோடியாக திருநங்கையர் திகழ வேண்டும்!
/
எல்லாருக்கும் முன்னோடியாக திருநங்கையர் திகழ வேண்டும்!
எல்லாருக்கும் முன்னோடியாக திருநங்கையர் திகழ வேண்டும்!
எல்லாருக்கும் முன்னோடியாக திருநங்கையர் திகழ வேண்டும்!
PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

'இந்தியாவின் முதல் வில்லிசை திருநங்கை' என்ற பெருமைக்குரியவரான, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியைச் சேர்ந்த சந்தியாதேவி: என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி. உறவினர் ஒருவரின் உதவியால் தோவாளையில் குடியேறி, 15 ஆண்டுகள் ஆகின்றன.
பெற்றோர், தம்பி, தங்கையர் இருந்தாலும், தனியாக தான் இருக்கிறேன். வில்லுப் பாட்டு தான் என் பிரதான தொழில்.
கடவுள் மீது கொண்டுள்ள அதீத பற்றால், அம்மன் கோவில் ஒன்றை கட்டி, முறையாக பராமரித்து வருகிறேன். 4வது வார்டு உறுப்பினராக சுயேச்சையாக நின்று வென்றுள்ளேன். பொதுமக்களுடைய ஆதரவும், திருநங்கை சமூகத்தின் உதவியும் எனக்கு கிடைக்கிறது.
சிறுவயது முதலே வில்லுப்பாட்டின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி கோவில் திருவிழாக்களில் கேட்டு கேட்டு வீட்டில் வந்து பாடுவேன். அப்படி கேள்வி ஞானத்தால் நானே கற்றுக் கொண்ட கலை தான் இது.
மக்களிடம் மிகவும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நான் வேறு திருவிழாக்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பேன் என்பதால், என்னிடம் கேட்டு, திருவிழா தேதியை தீர்மானிக்கும் அளவிற்கு கடவுள் எனக்கு அனுக்கிரகத்தை கொடுத்துள்ளார்.
இந்தக் கலையை திருநங்கையர் மற்றும் மாணவ - மாணவியருக்கும் கற்றுத் தருகிறேன்.
கலைச்சுடர் மணி, திருவள்ளுவர் விருது, மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஏராளமான விருதுகள் வாங்கிஉள்ளேன்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதன் வாயிலாக, பல விருதுகள் என்னை தேடி வந்தன. 'வில்லுப்பாட்டில் முதல் திருநங்கை' என்ற விருதும் வாங்கியுள்ளேன்.
தமிழக முதல்வர் எனக்கு, 'சிறந்த திருநங்கை' என்ற விருது வழங்கியதை சந்தோஷமாகவும், பெருமிதமாகவும் உணர்கிறேன். கலைமாமணி விருது வாங்குவதே என் லட்சியம்.
திருநங்கையர் பலருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர அரசும் உதவ வேண்டும். சிறுதொழில் துவங்க அரசு கடனுதவி செய்ய வேண்டும்.
முதியோர் இல்லமும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமும் கட்ட வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் போன்ற ஆசைகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவினால் நன்றாக இருக்கும்.
எதிர்காலத்தில் எல்லாருக்கும் முன்னோடியாக திருநங்கையர் திகழ வேண்டும். பெண்களும், ஆண்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக வர வேண்டும்.

