/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கிராமத்து பெண்களும் தொழிலில் இறங்கி சாதிக்க முடியும்!
/
கிராமத்து பெண்களும் தொழிலில் இறங்கி சாதிக்க முடியும்!
கிராமத்து பெண்களும் தொழிலில் இறங்கி சாதிக்க முடியும்!
கிராமத்து பெண்களும் தொழிலில் இறங்கி சாதிக்க முடியும்!
PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

பூஜை பொருட்களை தயாரித்து, மாதம் 2.50 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும், புதுக்கோட்டை மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த ராதிகா:
நான், 10ம் வகுப்பு தான் படித்திருக்கிறேன். 2001ல் திருமணமானது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அவர் வருமானத்தில் தான், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையில் இடம் வாங்கி, வீடு கட்டி குடி பெயர்ந்தோம்.
வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவரிடம், 'இங்க வந்துடுங்க, ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொல்லியபடியே இருப்பேன். ஒரு வழியாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பினார்.
பல தொழில்கள் குறித்து பேசி, ஒரு கட்டத்தில் பூஜைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலை செய்வது என முடிவு செய்து, பெங்களூரு சென்று அதற்கான தயாரிப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டோம்.
கையில் இருந்த பணத்துடன், வங்கியில் லோன் போட்டு, 2020ல் மயில் வீரா பூஜா புராடக்ட்ஸ் நிறுவனத்தை, 'கலாபம்' என்ற பிராண்டில் துவங்கினோம்.
தற்போது கப் சாம்பிராணி, அகர்பத்திகள், கம்ப்யூட்டர் சாம்பிராணி, அபிஷேக பன்னீர், அபிஷேகப் பொடி என ஐந்து வகையான பூஜைப் பொருட்களை தயாரிக்கிறோம். கூடவே, விபூதி, குங்குமம், கட்டி சாம்பிராணி, சந்தனம் என, பல பொருட்களை மொத்தமாக வாங்கி கொடுக்கிறோம்.
முதலில், எங்கள் பகுதியில் கோவில் அருகில் கடை வைத்துள்ளவர்களை அணுகி, சாம்பிள் பாக்கெட்டுகளை கொடுத்து ஆர்டர் பிடித்தோம். கணவர் சுற்றுவட்டார கிராமங்களை அணுகி, ஆர்டர் கேட்டார். ஒரு வழியாக மார்க்கெட்டை பிடிக்க எட்டு மாதமானது.
தொழிலுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி., எடுத்ததுடன், டிரேட் மார்க்கும் வாங்கினோம். தற்போது புதுக்கோட்டை மட்டுமின்றி, சிவகங்கை, தஞ்சை, திருச்சி போன்ற மாவட்ட எல்லைகளில் உள்ள கிராமங்களுக்கும் சப்ளை செய்கிறோம். ஆறு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
எங்கள் பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். மேலும், அது குறித்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவதால், திருத்தணி, கேரளா, மலேஷியா உள்ளிட்ட இடங்களிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
மாதம் 2.50 லட்சம் ரூபாய் வரை, டர்ன் ஓவர் செய்கிறோம். பெண்கள், குறிப்பாக கிராமத்தில் இருக்கும் பெண்கள் 'தொழிலுக்கும், நமக்கும் துாரம்' என, நினைக்க வேண்டியதில்லை.
உங்களால் சிறப்பாக செய்ய முடியும் பிசினஸ் ஐடியாவை பிடித்து, விடாமுயற்சி, கடின உழைப்பு, தொழில் குறித்து நம்மை, 'அப்டேட்' செய்து, வாடிக்கையாளர்களை கவரும் விஷயங்களில் பாஸ் ஆகிட்டால் வெற்றி நிச்சயம்!
தொடர்புக்கு:
88257 75166

