/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
20 தொழில்களை கைவிட்டு வெற்றி கண்டோம்!
/
20 தொழில்களை கைவிட்டு வெற்றி கண்டோம்!
PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் நாகா நிறுவனத்தின் உணவு பிரிவுக்கான டெக்னிக்கல் டைரக்டர் விஜய் ஆனந்த், லாஜிஸ்டிக் பிரிவின் பிசினஸ் ஹெட்டான அவரது மனைவி லட்சுமி:
விஜய் ஆனந்த்: கடந்த 1962-ல் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து, சென்னையில், 'யுனைடெட் இந்தியா புளோர் மில்' என்ற பெயரில் சீனிவாசன் துவங்கிய நிறுவனம் தான் நாகா நிறுவனம்.
அதன்பின், 1971ம் ஆண்டில் இரண்டாவது ஆலை, 1975ல் மூன்றாவது ஆலை என, இரு ஆலைகளையும் சென்னையில் நிறுவி, தன் பிசினசை விரிவுபடுத்தினார்.
பின், வயது மூப்பு காரணமாக தன் மகனான, என் மாமனாரும், எங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான கமலக்கண்ணனிடம் பொறுப்பை முழுவதுமாக ஒப்படைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்ற முனைப்போடு தன் தாய் பெயரில், 1977-ல் நாகலட்சுமி புளோர் மில் என்ற நிறுவனத்தை துவங்கினார் கமலக்கண்ணன்.
படிப்படியாக வளர்ந்து, 2007-ல் திண்டுக்கல்லில் 64,000 டன் வரை கோதுமையை சேமித்து வைக்க பயன்படுத்தும் சேமிப்பு கிடங்கை நிறுவினார்.
இது, இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கோதுமை சேமிப்பு கிடங்கு என்ற அளப்பரிய பெருமையை எங்கள் நிறுவனத்துக்கு பெற்று தந்ததோடு, புளோர் மில்ஸ் சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத உச்சத்துக்கு எங்களை உயர்த்தியது.
அரிசியில் பல வகைகள் இருப்பது போல, கோதுமையிலும், 420 வகைகள் இருக்கின்றன.
கோதுமையை குருணையாக மாற்றினால் ரவை, அரைத்து பவுடர் வடிவில் மாற்றினால் மைதா, கோதுமை மேல் உள்ள தவிடை நீக்காமல் அரைத்தெடுத்தால், கோதுமை மாவு என்ற முறையில், தரமாக உற்பத்தி செய்கிறோம்.
லட்சுமி விஜய் ஆனந்த்: 1998-ல் நாங்கள், 23 வகையான தொழில்களை செய்து வந்தோம். பல துறைகளில் தடம் பதிக்க நினைத்த எங்களால், அனைத்து தொழில்களையும் கவனிக்க முடியாத சூழல் உருவானது.
வியாபார உலகில் தடம் மாறி போனோம். அது எங்கள் நிறுவனத்தை பாதித்தது. பல்வேறு வகையில் இழப்புகளை ஏற்படுத்தியது.
சரிவில் இருந்து மீள நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமித்த கருத்துடன் பல தொழில்களை கைவிட்டோம்.
முக்கியமாக உணவு பொருட்கள், டிடர்ஜென்ட், மினரல்ஸ் அண்டு மைனிங் ஆகிய மூன்று தொழில்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தோம். துபாய், சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்துக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
மொத்தம் 3,000 ஊழியர்கள், ஆண்டிற்கு, 2,400 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என, வெற்றி கரமாக இயங்கி வரும் நாகா நிறுவனத்தை தரம், சுவை ஆகியவற்றில் சமரசமின்றி முதலிடத்தில் முன்னிறுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

