/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உழைப்பின் பலனால் வலிகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!
/
உழைப்பின் பலனால் வலிகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!
உழைப்பின் பலனால் வலிகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!
உழைப்பின் பலனால் வலிகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!
PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

தேனி மாவட்டம், கூடலுாரில் தையல் கடை நடத்தி வரும் இந்திரா:
நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் என்பது தான் என்னோட ஆசை. ஆனால், குடும்ப சூழ்நிலை அனுமதிக்கவில்லை.
ஆறாம் வகுப்புடன், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திட்டு, குடும்பத்துடன் திருப்பூர் போயிட்டோம். அங்கு கம்பெனி வேலைக்கு செல்ல துவங்கினேன்.
என் வயசு பொண்ணுங்க பள்ளிக்கு பையை எடுத்துச் செல்லும்போது, நான் மட்டும் கம்பெனிக்கு, மதிய சாப்பாட்டு பையை துாக்கிட்டு போயிட்டிருப்பேன்; அப்போது கண்ணில் ரத்தக்கண்ணீரே வரும். அன்னிக்கு துவங்கிய ஓட்டம், இப்போது வரை நிற்கவில்லை.
கைமடிப்பு வேலைக்கு ஒரு ஷிப்டுக்கு, 7 ரூபாய் வீதம், ஒன்றரை ஷிப்ட் பார்த்து, 10 ரூபாய் சம்பளம் வாங்கினேன். மூன்று ஆண்டுகளில் அது, 60 ரூபாயாக உயர்ந்தது. அதன்பின், திருமணமாகி கூடலுாருக்கு வந்துட்டேன்.
எனக்கு டெய்லரிங் மீது ஆர்வம் அதிகம். முறையாக தைக்க தெரிந்தால், அக்கம் பக்கத்து வீட்டு பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுக்கலாம். அதனால், ஓரளவு கையில் காசு வரும் என்ற எண்ணம் வந்தது.
என் அப்பா, ஒரு தையல் மிஷின் வாங்கி கொடுத்தார். நானே அதில் ஜாக்கெட் தைத்து, கற்க துவங்கினேன். பின்னர் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் சொல்ல, அவர்களும் தைக்க கொடுத்தனர். என் தையலும், டிசைன்களும், பெண்களுக்கு பிடித்துப் போக, பலரும் தேடிவந்தனர்.
பின், ஒரு கடையை லீசுக்கு எடுத்தேன். ஒரு தையல் மிஷினோடு அங்கு தைக்க துவங்கினேன்.
சில ஆண்டுகளில் மேலும் ஒரு மிஷின் வாங்கி, ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்தேன். பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் கடைக்கு வரத் துவங்கினர்.
கடையை முன்கூட்டியே திட்டமிட்டு பெரிதாகக் கட்டியிருந்ததால், அந்த இடத்தில் ஜவுளிக்கடை வைக்கலாம் என தோன்றியது. சேலை, சுடிதார், பிளவுஸ், இன்னர்ஸ் வாங்கி, விற்றேன். இப்படியே டெய்லர் கடையுடன், ஜவுளிக்கடையும் வளர்ந்து விட்டது.
காலை 5:30க்கு எழுந்து விடுவேன். வீட்டு வேலைகளை விறுவிறுவென முடித்து, 10:00 மணிக்கு கடைக்கு வந்துவிடுவேன்.
எனக்கு தொழில் தான் முக்கியம். 'துணி வெட்டணும்... தைக்கணும்...' என்பது மட்டுமே எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த வைராக்கியம் தான் என்னை இத்தனை துாரம் உயர்த்தியிருக்கிறது.
என் கடை, மக்கள் குடியிருப்பு பகுதியில் இருப்பதால், இரவிலும் பெண்கள் தைக்க வருகின்றனர்.
கணவர் வீரபத்திரன் தனியாக ஹோட்டல் நடத்தி வருகிறார். நாங்கள் இருவரும் வைராக்கியத்துடன் சம்பாதித்து, சுயமாக முன்னேறி இருக்கிறோம்.
எங்களின் இடையறாத உழைப்புக்கு கிடைக்கும் பலன்களை பார்க்கும்போது, வலிகளெல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!

