/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியும்!
/
பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியும்!
பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியும்!
பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியும்!
PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

கிட்டத்தட்ட 20 பெண்கள் இணைந்து, 20 ஏக்கர் நிலத்தில் பூக்கள் மற்றும் துளசி ஆகியவற்றை சாகுபடி செய்து விற்பனை செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், கூவனுாத்து குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த கவிதா - சுதா:
சுதா: எங்கள் ஊரில் விவசாயம் தான் பிரதான தொழில். பருவம் மாறிட்டே இருந்ததால், நஷ்டம் அதிகமாகி கடன் பெருகவே பலர் விவசாயத்தை விட்டே போயிட்டாங்க. நான் திருமணமாகி வந்தபோது, எங்கள் நிலத்தில் நெல் விதைச்சுட்டு இருந்தாங்க.
அதில் நிரந்தர வருமானம் இல்ல. எங்கள் ஏரியாவில் ஒருத்தர், துளசி விவசாயம் பண்ணிட்டிருந்தாரு. 'ஆண்டு முழுக்க அறுவடை இருக்கும்'னு சொன்னாரு.
அவரோட வழிகாட்டுதலில் மண்ணை பக்குவப்படுத்தி நானும், என் கணவரும் சேர்ந்து எங்க நிலத்தில் துளசி விதைச்சோம். 10 ஆண்டுகளாக துளசி சாகுபடி தான் செய்கிறோம்.
நஷ்டம் வந்தாலும், இதுவரை பசி, பட்டினின்னு கஷ்டப்பட்டதில்ல. இங்கு இருக்கும், 20 பேரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அறுவடை இல்லாத நேரத்தில் விவசாய கூலி வேலைக்கு போவோம்.
கவிதா: நானும், தோழி சுதாவும், பூ விவசாயம் செய்யும் பெண்களை ஒன்று சேர்க்கலாம்னு முடிவு செய்தோம். 20 பேர் சம்மதிச்சாங்க. புது மகளிர் குழுவை பதிவு செய்தோம். அரசிடம் இருந்து விவசாய கடன்கள், கருவிகள் போன்ற உதவிகள் கிடைத்தன. நிலத்தை பக்குவப்படுத்தி ஆளுக்கொரு பூவை விதைச்சோம்.
கடன் வாங்கி முதலீடு செய்தோம். 'ஆம்பளைங்களே இந்த மண்ணை கட்டிக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியல; பொம்பளைங்க என்ன பண்ணிருவீங்க'ன்னு ஊரே எங்களை பார்த்து சிரிச்சுது.
எங்கள் குடும்பத்தார் எங்களுக்கு சப்போர்ட் பண்ணாங்க. விதை போடுறது, நாத்து நடுறது, களை எடுக்குறது, உரம் வைக்கிறது, அறுவடை பண்றது, விற்பனைக்கு எடுத்துட்டு போறதுன்னு எல்லா வேலைகளையும் நாங்களே செய்தோம். அறுவடை இல்லாத நாட்களில் வேறு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறோம்.
துளசி ஆண்டு முழுக்க விளைச்சல் கொடுக்கும். மல்லிகைப்பூ சித்திரை - ஐப்பசி வரையிலும், முல்லை ஐப்பசி துவங்கி பங்குனி வரையிலும் விளைச்சல் இருக்கும். மரிக்கொழுந்து புரட்டாசி துவங்கி, மார்கழி வரை விளைச்சல் இருக்கும்.
சில நேரங்களில் வெயிலால் பூக்கள் கருகுறது, மழையில் பூக்கள் அழுகி போறதெல்லாம் நடந்து நஷ்டத்தையும் சந்திச்சுஇருக்கோம்.
பல பிரச்னைகளுக்கு நடுவுலயும், மொத்த வியாபாரிகள் மாதந்தோறும் கேட்ட, 7 டன் பூக்களை நாங்க இப்போது அறுவடை செய்கிறோம்.
மாதம், 80,000 ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' பண்றோம். பெண்கள் ஒன்றாக சேர்ந்தால், வாழ்க்கையில் முன்னேற முடியும்கிறதுக்கு நாங்களே உதாரணம்.