/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது!
/
நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது!
நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது!
நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது!
PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

நாட்டு மாடுகளின் பாலை கொள்முதல் செய்து, நவீன இயந்திரம் வாயிலாக பதப்படுத்தி, சென்னையில் வீடு வீடாக விற்பனை செய்து வரும் பாலமுருகன்:
வேலுார், பேரணாம்பட்டு தான் சொந்த ஊர். 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, மீடியாவில் வேலை செய்யும் ஆசையில், 2005ல் சென்னைக்கு வந்தேன்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை கிடைத்தது.
அதன் வாயிலாக, நிகழ்ச்சிகள் தயாரித்து தரும் நிறுவனம் ஒன்றை துவங்கினேன்; அதில் நிறைய லாபம் சம்பாதித்தேன். ஆயினும், தொழிலில் நிறைய நெருக்கடிகளை சந்தித்ததால், நிம்மதியான வாழ்க்கை இல்லை.
இதனால், நம் சொந்த ஊரான பேரணாம்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாட்டு மாட்டு பாலை கொள்முதல் செய்து, சென்னையில் வியாபாரம் செய்தால், மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.
என் கிராமத்திலேயே, 2 கோடி ரூபாய் முதலீட்டில், பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் பால் பதனீட்டு தொழிற்சாலையை ஆரம்பித்தேன்.
அதிக சத்துக்கள் நிறைந்த, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நாட்டு மாட்டு பாலை பாலித்தீன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதில் உடன்பாடில்லை.
அதனால், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து, விற்பனை செய்ய துவங்கினேன். பாட்டிலுக்காக வாடிக்கையாளர்களிடம், 150 ரூபாய் முன்வைப்பு தொகை வாங்கி விடுவோம்.
பால் நிரப்பிய பாட்டிலை நாங்கள் கொடுக்கும் போது, எங்களிடம் காலி பாட்டிலை அவர்கள் கொடுத்து விடுவர்.
நாட்டு மாட்டு பால் கொள்முதலுக்கும் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, அலுமினிய கேன்களில் கொள்முதல் செய்கிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எங்கள் பாலை ப்ரீசரில் வைத்திருந்து சில மணி நேரங்கள் கழித்து எடுத்து பார்த்தால், பாட்டிலின் மேற்பகுதியில் கொழுப்பு ததும்பி நிற்கும். இது போன்று இருப்பதை மக்கள் மிகவும் விரும்புகின்றனர். நுகர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் அபார்ட்மென்டில் வசிக்கும் மக்களுக்கும், நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்றும் வினியோகம் செய்கிறோம்.
இதில் எனக்கு லாப நோக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிகிறது.
அழிவில் இருந்து நாட்டு மாடுகளை பாதுகாக்க, நாமும் ஒரு சிறு பங்களிப்பு செய்கிறோம் என்ற மனநிறைவும் கிடைக்கிறது.
-தொடர்புக்கு:
94891 32020

