/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
1,250 கிலோ வெள்ளரியில் ஆண்டுக்கு ரூ.85,000 லாபம்!
/
1,250 கிலோ வெள்ளரியில் ஆண்டுக்கு ரூ.85,000 லாபம்!
PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேதையன்: நாங்கள் விவசாய குடும்பம். பிளஸ் 2 முடித்ததும், விவசாயத்தில் இறங்கி விட்டேன். எங்கள் குடும்பத்திற்கு, 3.5 ஏக்கர் நிலம் இருக்கிறது.
தென்னை, குழியடிச்சான் வகை நெல், நிலக்கடலை, வெள்ளரி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறேன். எங்கள் ஊர் விவசாயிகள், பல தலைமுறைகளாக குழியடிச்சான் என்ற நெல் ரகத்தை மட்டும் தான் பயிர் செய்து வருகிறோம்.
காரணம், அதிகமாக மழை பெய்து, வயலில் ஒரு வாரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றாலும், பயிர்கள் கீழே சாயாது. அதேசமயம், வறட்சியை தாங்கியும் வளரும்.
நெல் சாகுபடி வாயிலாக, எல்லா செலவுகளும் போக 1 ஏக்கருக்கு குறைந்தபட்சம், 40,000 ரூபாய் கிடைக்கும். நெல் அறுவடை முடிந்த பிறகு, நிலக்கடலை, வெண்டை, கொத்தவரங்காய், செண்டுமல்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வேன். இவற்றின் வாயிலாகவும் கணிசமான லாபம் கிடைக்கிறது.
கடந்த, 2009 முதல் இயற்கை முறையில் நாட்டு ரக வெள்ளரி பயிரிட்டு வருகிறேன். இயற்கை விவசாய தோட்டங்களில் தேனீக்கள் வளர்த்தால், 30 முதல் 35 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பலரும் கூறினர்.
அந்த ஆண்டு சோதனை முயற்சியாக, என் வெள்ளரி தோட்டத்தில், நான்கு பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கத் துவங்கினேன். கண்கூடாக பலன் தெரிந்தது. அதனால், இப்போது வரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன்.
தவிர, ஒரு பெட்டிக்கு, 1 கிலோ வீதம், 4 பெட்டிகளில் இருந்து மொத்தம், 4 கிலோ தேன் கிடைக்கும். 100 கிராம், 100 ரூபாய் என விற்பனை செய்கிறேன். 4 கிலோ தேன் விற்பனை வாயிலாக, 4,000 ரூபாய் வரு மானம் கிடைக்கிறது.
நாட்டு ரக வெள்ளரி, விதைத்ததில் இருந்து, 125 நாட்களில் பறிப்புக்கு தயாராகி விடும்.
என் தோட்டத்தில் விளையும் வெள்ளரி பிஞ்சுகளை தினமும் அறுவடை செய்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன். 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 50 ரூபாய் முதல் அதிகபட்சம், 120 ரூபாய் வரை கிடைக்கும். 1 ஏக்கர் வெள்ளரி சாகுபடி வாயிலாக, 1,250 கிலோ மகசூல் கிடைக்கும்.
இதில், 1 கிலோவுக்கு சராசரியாக, 80 ரூபாய் விலை கிடைக்கும். 1,250 கிலோ வெள்ளரி பிஞ்சுகள் வாயிலாக, 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். என்னிடம் சொந்த டிராக்டர் இருப்பதால், நானே உழவு செய்து விடுவேன்.
நாட்டு மாடுகள் வளர்ப்பதால், இயற்கை உரங்களும் வெளியில் இருந்து வாங்க அவசியமில்லை. செலவுகள் எல்லாம் போக, 85,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு: 96556 81155.