PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

கோவையில் சாலையோரம் கடை போட்டு, ஒயர் கூடைகள் பின்னி விற்பனை செய்யும் கருப்பசாமி - மாலதி தம்பதி:
கருப்பசாமி: எங்கள் சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. மூன்று தலைமுறையாக பனையோலையில் கூடை பின்னுவது தான் தொழில்.
ஆனால், இது தொழில் இல்லை; கலை. நான் இதை என் பாட்டியிடம் கற்றுக் கொண்டேன். 25 வயதில் தனியாக கடை ஆரம்பித்தேன். அதன்பின், மாமா மகளையே திருமணம் செய்து கொண்டேன்.
மனைவிக்கும் கூடை பின்னத் தெரியும் என்பதால், இருவருமாக சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தோம். நான் ஆர்.எஸ்.புரத்திலும், மனைவி ரேஸ்கோர்சிலும் சாலையோரம் கடை வைத்துள்ளோம்.
காலை 7:00 முதல், இரவு 7:00 மணி வரை கடையில் தான் இருப்போம். வாரம் ஏழு நாட்களும் கடை இருக்கும். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் தான், 'லீவ்' எடுத்துக் கொள்வோம்.
அந்தந்த நாள் வியாபாரத்தை பொறுத்து தான் வருமானம் அமையும். சில நாள், 500 ரூபாய் கிடைக்கும்; கூட்டம் கூடி, நன்கு வியாபாரமானால், 5,000 ரூபாய் கூட கிடைக்கும்.
எங்களிடம், 100 முதல் 1,000 ரூபாய் வரைக்கும் பனையோலை மற்றும் பிளாஸ்டிக்கில் செய்த கூடை, 'பேக்' கிடைக்கும். கூடையின் அளவு, டிசைனுக்கு ஏற்ப விலை.
சிலருக்கு அவர்கள் கேட்கும் கலரில், டிசைனில் ஆர்டர் எடுத்தும் பின்னிக் கொடுப்போம். 200, 300 கூடைகள் கூட மொத்தமாக செய்து கொடுக்கிறோம்.
மாலதி: ஆரம்பத்தில் பனையோலையில் தான் கூடை பின்னி, கலர் அடித்து விற்பனை செய்தோம். அதன்பின், பிளாஸ்டிக் ஒயரில் பின்ன ஆரம்பித்தோம்.
பழைய மாடல் கூடை மட்டுமல்லாமல், அதிலேயே நிறைய கலர், டிசைன் என பின்னியதால், மக்கள் ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர்.
எங்களிடம் கூடை வாங்கியோரை கடை, மார்க்கெட் என்று எங்கள் கூடையும், கையுமாக பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
எங்களுக்கு மூன்று குழந்தைகள். இரு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம். மகன் போட்டோகிராபராக வேலை பார்க்கிறான்.
எல்லாவற்றுக்கும் காசு தந்தது, இந்த ரோட்டு கடைகள் தான். இப்போது, குழந்தைகள் கடமையெல்லாம் முடிந்து விட்டது. அதனால், கடையில் தான் முழு நேர கவனமும்.
ரோட்டு கடையில் இருந்து வாடகை கடைக்கு மாற வேண்டும். தொடர்ந்து உழைத்தபடியே இருப்போம். நமக்கு தெரிந்ததும், நம் வாழ்க்கையை இவ்ளோ துாரம் நகர்த்தி வந்திருப்பதும் உழைப்பு மட்டும் தான்!