/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எல்லா பெண்களிடமும் தனித்திறமை நிச்சயம் இருக்கும்!
/
எல்லா பெண்களிடமும் தனித்திறமை நிச்சயம் இருக்கும்!
PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

அகல் விளக்குகள், அவற்றுக்கான மாடங்கள் உட்பட பலவற்றிலும் வண்ணம் தீட்டி, பாரம்பரிய கோலங்கள் வரைந்து விற்பனை செய்து வரும், சென்னையை சேர்ந்த மீனா:
சொந்த ஊர் காரைக்குடி. பி.சி.எஸ்., படித்துவிட்டு, 'பைன் ஆர்ட்ஸ் டிப்ளமா' முடித்து உள்ளேன். நான் பார்த்து வந்த வங்கி வேலையை, குழந்தைகள் பிறந்த பின் தொடர முடியவில்லை. ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் உண்டு.
இதையறிந்த கணவர், முகநுாலில் எனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் நான் வரைந்த ஓவியங்களை பதிவிடுவார். என், 40வது பிறந்த நாள் விழாவுக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் என் ஓவிய ஆர்வத்தையும், திறமையையும் வெகுவாகப் பாராட்டினர்.
அடுத்தகட்டத்திற்கு முன்னேறும்படி என்னை ஊக்கப்படுத்தினர். அந்நேரம் கொரோனா தொற்று காலகட்டம் என்பதால், நாங்கள் ஒரு, 'யு டியூப் சேனல்' துவக்கினோம். அதில், கோலம் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். சிறுவயது முதலே கோலம் போடுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால், அதிலேயே கவனம் செலுத்தினேன்.
சாதாரண மண் அகல் விளக்கில் கோலமிட்டு, அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்; விற்பனையும் செய்தேன். நிறைய ஆதரவு கிடைத்ததுடன், வருமானமும் பெருகியது. பின், அகல் விளக்கில் மட்டும் கோலம் போடாமல், அதை வைப்பதற்கான ஸ்டாண்ட், மணி மாட விளக்கு, படிகள், கொலு படிகள் என எதிலெல்லாம் கோலம் போட முடியுமோ, அதிலெல்லாம் பெயின்டால் கோலமிட்டு, என் தயாரிப்புகளை விற்பனை செய்தேன்.
மர டிரேக்களில் ரிட்டர்ன் கிப்ட்ஸ் என எல்லாவற்றையுமே கோல டிசைன் வாயிலாக செய்து கொடுக்கிறேன். அது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய வகையிலும் செய்து கொடுக்கிறேன்.
பல இடையூறுகளுக்கு மத்தியில் தான் என்னால் முன்னேற முடிந்தது. ஆரம்பத்தில், யு டியூப் சேனல் பெரிதாக ரீச் ஆகவில்லை. ஆனாலும், மனம் தளராமல் என் படைப்பாற்றலை வெளியே கொண்டு வந்தேன்.
மூலப்பொருட்கள் வாங்குவது முதல் அதை பேக்கிங் செய்து, விற்பனை செய்வது வரைக்கும் என் குடும்பத்தினர் மிகவும் உதவியாக இருக்கின்றனர். என் தயாரிப்புகளை வாங்கியோரே, அதை மற்றவர்களிடமும் சொல்வர். வியாபார ரீதியாக கொண்டு சென்றவர்கள் என், 'பாலோயர்ஸ்' தான்.
எல்லா பெண்களிடமும் தனித்திறமை என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அதை சரியாகக் கண்டுபிடித்து, முறையாக வெளிக்கொண்டு வர வேண்டும். கைத்தொழில் ஒன்றை கற்று திறம்பட செயல்பட்டால் வாழ்வில் நிச்சயம் முன்னேறலாம். தொடர்புக்கு: 91506 69299
நான் படித்த பள்ளிக்கு புத்துயிர் தந்ததில் மனநிறைவு!
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள புதுக்குடி ஊராட்சி முன்னாள் தலைவி திவ்யா கணேசன்: மொத்தம், 400 வீடுகள் கொண்ட இந்த புதுக்குடி கிராமத்தின் மக்கள் தொகை, 1,300; விவசாயம்தான் பிரதான தொழில்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் 24வது வயதில், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்று, புதுக்குடி ஊராட்சி தலைவியாக பொறுப்பேற்றேன். கடந்த ஜனவரியில் தான் பதவிக்காலத்தை நிறைவு செய்தேன்.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்தபடியே இருந்தது. இது, எனக்கு பெருங்கவலையை ஏற்படுத்தியது.
பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து, மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டால், இங்கு அரசு பள்ளியே இல்லாமல் போய்விடும் எனவும் கவலைப்பட்டேன்.
இதனால், 'நம் ஊர் நடுநிலைப்பள்ளி புதிய மாணவர் சேர்க்கையின்போது, அந்த குடும்பத்து பிள்ளைகளின் குடும்பத்தினர் மட்டும் வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டத் தேவையில்லை. அவர்களுக்காக அந்த வரிகளை, நானே என் சொந்த பணத்தில் செலுத்தி விடுவேன்' என்று அறிவித்தேன்.
இப்பள்ளி நான் படித்த பள்ளி. அதனால், அந்த பள்ளி மீது எனக்கு தனிப்பட்ட அக்கறை உண்டு. அதிலும், நான் ஊராட்சி தலைவியாக பணியாற்றும் காலத்தில் பள்ளியின் வளர்ச்சிக்கும், அந்த பள்ளியை காப்பாற்றிக் கொள்ளவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் இந்த திட்டத்தை அறிவித்தேன்.
அதற்கேற்ப, புதிதாக மாணவர்களும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளியில் சேர்ந்த 20 மாணவ - மாணவியரின் குடும்பத்துக்கு உண்டான வீட்டு வரி, தண்ணீர் வரியை என் சொந்த பணத்தில் செலுத்தியுள்ளேன்.
தற்போது, இந்த பள்ளியில் 90 மாணவர்களும், ஆறு ஆசிரியர்களும் உள்ளனர். பள்ளியில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
சில அன்பர்களிடம் நிதியுதவி பெற்று, பள்ளிக்கு புதிய கழிப்பறைகள் கட்டியதுடன், பழைய கழிப்பறைகள் புதுப்பித்தும் தரப்பட்டுள்ளன. புதிதாக வகுப்பறை கட்டடம் ஒன்றும் கட்டித் தரப்பட்டுள்ளது.
எப்படியோ, சிறுவயதில் இந்த கிராமத்து மண்ணில் நான் படித்து வந்த நடுநிலைப்பள்ளிக்கு, ஊராட்சி தலைவியாக நின்று புத்துயிர் தந்துள்ளதில் எனக்கு மிகவும் மனநிறைவு!
தொடர்புக்கு:
89395 95574

