/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சென்னை முழுதும் 10,000 மரக்கன்று நடும் முயற்சி!
/
சென்னை முழுதும் 10,000 மரக்கன்று நடும் முயற்சி!
PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தீவிரமாக பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த தினேஷ்: இயற்கை மீதான ஆர்வம் காரணமாக, பொறியாளர் வேலையை உதறிவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி மாணவராக பணியாற்றினேன்.
அங்கு படித்தபோது, எலக்ட்ரானிக் வாகனங்கள் சார்ந்த ஆராய்ச்சியில், நம் நாட்டில் சுவாசம் தவிர்த்து, ஒரு தனி மனிதன், ஓராண்டுக்கு 4,000 கிலோ கார்பனை வெளியிடுகிறான் என்பதை அறிந்து, அதிர்ந்தேன்.
நாம் ஓட்டும் வாகனங்கள் மட்டுமின்றி, சாப்பிடுவது, குளிப்பது, அணியும் உடைகள், நாம் உபயோகிக்கும் மின்சாரம் என பல வகைகளில், நம்மிடம் இருந்து கார்பன் வெளிப் படுகிறது என்ற உண்மை தெரிய வந்தது.
என் மனைவி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை சூழ்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார். எங்கள் குழந்தை, 'கார்பன் நியூட்ரல்' குழந்தையாக பிறந்து வளர விரும்பினோம்.
தற்போது, கார்பன் வெளியாகும் அளவு அதிகரித்துள்ளது. அதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, நிறைய மரங்கள் வளர்க்கலாம். இப்படி மரங்களின் மூலம், காற்றில் கார்பன் அளவை சமநிலைப்படுத்தும் முயற்சியே, 'கார்பன் நியூட்ரல்' எனப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு மனிதன் சுவாசிக்க, 1,000 மரங்கள் இருந்தன. ஆனால், தற்போதோ வெறும், 23 மரங்கள் தான் உள்ளன. எனவே, அதிகளவில் மரங்கள் நட்டு வளர்ப்பதே இதற்கு நல்ல தீர்வு என்று உணர்ந்தோம்.
என் மனைவியின் சொந்த ஊரான சிவலிங்கபுரம் கிராமத்தை, இந்த முயற்சிக்காக தேர்ந்தெடுத்தேன். பாக்கு, எலுமிச்சை, தென்னை, மா, பலா உட்பட, 6,000 மரக்கன்றுகளை விவசாயிகள் உதவியுடன் நட்டு வைத்தோம். அவை தற்போது செழித்து வளர்ந்து, விவசாயிகளுக்கு பலன் கொடுக்கின்றன.
எங்கள் மகள் பிறந்தது முதல், அவள் வாழ்நாள் முழுதும் வெளியிடும் கார்பனை உறிஞ்ச தேவையான மரங்கள் வைத்ததன் வாயிலாக, 2023- மார்ச் 3ல் பிறந்த எங்கள் மகள் டி.ஜே.ஆதவியை, 'உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை'யாக அறிமுகப் படுத்தினோம்.
இதுவரை, 2.60 லட்சம் மரங்கள் நட்டு வைத்துள்ளோம். தவிர, சென்னை பெருங்குடியில் இரண்டு, கோபால புரம், நுங்கம்பாக்கத்தில் தலா ஒன்று என, 'மியாவாக்கி' எனப்படும் அடர்வனங்களை உருவாக்கியுள்ளோம்.
என் அப்பா, மனைவி என அனைவருடைய பங்கெடுப்பும் இதில் உள்ளது. என் தம்பியும் ஐ.ஐ.டி.,யில் இருந்து வெளியேறி, என்னுடன் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை முழுதும், 10,000 மரக்கன்றுகளை நடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். தவிர, தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கைகோர்த்து, பல சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்.