/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறேன்!
/
இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறேன்!
PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM

திருச்சியைச் சேர்ந்த, 'எம்.பி.ஆர்., புட்ஸ்' நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பார்கவி:
நான், திருச்சியில் பிறந்து வளர்ந்தவள். என் அப்பா, திருச்சியில், 'கூரியர்' நிறுவனத்தை நடத்தி வந்தார்.
என்னுடன் பிறந்தது தங்கை மட்டும் தான். 'எனக்குப் பின், 'பிசினசை' நீ தான் நடத்த வேண்டும்' என்று சொல்லிச் சொல்லி என்னை வளர்த்ததால், கல்லுாரியில், பி.பி.ஏ., படித்து முடிக்கும்போதே எனக்கு திருமணமாகி, குழந்தையும் பிறந்து விட்டது.
பின், எம்.பி.ஏ., படித்தேன். அதன் பின், ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கினேன். கடந்த, 2007 முதல், என் அப்பாவின் பிசினசில் ஆர்வம் காட்ட துவங்கினேன்.
அப்போது, 'கூரியர் சர்வீஸ்' என்பது எல்லா விஷயங்களையும் கையில் எழுதித் தரும்படி இருந்தது. அதை, கம்ப்யூட்டர் மயப்படுத்துவதன் மூலமே, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று முடிவெடுத்தேன்.
இன்றைக்கு அந்த நிறுவனத்தை ஹைடெக்காக மாற்றி அமைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. என் கணவர் நடத்தும், 'டிபார்ட்மென்டல் ஸ்டோரில்' கூட அவ்வப்போது சென்று உட்கார்ந்து, அவருக்கு சில ஐடியாக்களை கொடுப்பேன்.
இட்லி, தோசை மாவை ருசியாகவும், தரமாகவும் தயார் செய்தேன். ஆனால், கடைக்கு அனுப்பிய பின், பாக்கெட்டுகள் திரும்ப வரத் துவங்கின. விசாரித்து பார்த்ததில், நாங்கள் மாவில் உப்பு சேர்த்து தந்ததை மக்கள் விரும்பவில்லை.
உடனே, அதை மாற்றி அமைத்தோம். தவிர, எந்தக் கடையில் எவ்வளவு பாக்கெட் விற்பனை ஆகுமோ அந்தளவுக்கு மட்டுமே மாவு தயாரித்தோம். இதனால், மாவு வீணாவது முழுவதுமாக நின்றுபோனது.
இன்றைக்கு ஒரு நாளைக்கு, 1 - 1.5 டன் வரை இட்லி, தோசை மாவு தயாரித்து விற்கிறோம். ஊற வைத்த பாதாமை வறுத்து, பலருக்கு, 'சாம்பிளாக' கொடுத்ததில் நல்ல வரவேற்பு இருந்தது. உடனே அதை, 'நாச்' என்ற பிராண்டில் விற்க துவங்கினேன்.
அதன் பின், தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் காட்டிய வழியில், 'தேங்காய் சிப்ஸ்' தயாரித்து விற்க ஆரம்பித்த போதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதுபோல, பசு மஞ்சள் பேஸ்ட், பல வகையான ஊறுகாய்கள் என நான் அறிமுகப்படுத்திய உணவு வகைகள் எல்லாமே, சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருகின்றன.
வெறும், 30 லட்சம் ரூபாயில் துவங்கிய என் உணவு பிசினஸ் இன்றைக்கு, 5 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
இன்னும் ஆறு ஆண்டுகளில் அதாவது, 2030ல், 100 கோடி ரூபாய் நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்!