‘ஜெயிக்கும் வரை பொறுமையையும் முயற்சியையும் விடக்கூடாது!’
‘ஜெயிக்கும் வரை பொறுமையையும் முயற்சியையும் விடக்கூடாது!’
PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

பாலின தடைகளையும், சவால்களையும் கடந்து, சமூக வலைதளங்களில் தனக்கென முத்திரை பதித்து வரும், திருச்சியைச் சேர்ந்த அகிலா சிந்துஜா:
சிறு வயது முதலே எனக்கு ஊடகத்துறை மிகவும் பிடிக்கும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று பல தளங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்களுடன், எனக்கென ஒரு தனிப்பாதையை அமைத்து முன்னேறி வருகிறேன்.
திருச்சி உண்மையிலேயே ரொம்ப அழகான நல்ல ஊர். வந்தாரை வாழ வைக்கும் சென்னைன்னு சொல்வாங்க. திருச்சியும் அப்படித்தான்... நம்பி வர்றவங்களை கைவிடாது. அப்படிப்பட்ட திருச்சியில், என் கனவை இறுகப் பிடித்து, ஆசைப்பட்ட வேலையையும் செய்து வருகிறேன்.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில ஆங்கில இலக்கியம் முடித்தேன். ஆனாலும், எனக்கு ஊடகத்துறை மீது தான் காதல். ‘திருச்சி ராக்போர்ட் 45’ என்ற சமூக வலைதள பக்கம் ஒன்றை துவக்கி, திருச்சியில் நடக்கும் விஷயங்களை காணொளிகளாக பதிவிட்டு வருகிறேன்.
உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலை பார்த்தேன். சம்பளம் குறைவாக இருந்தாலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், சம்பளம் குறித்து அதிகம் யோசித்தது இல்லை.
என் மன திருப்திக்காக ஒரு வேலையை செய்யணும்னு நினைத்த போது, சமூக வலைதளத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள், பல நேரங்களில் மன அழுத்தத்தை கொடுத்திருக்கின்றன. வீடு, வேலை பார்க்கும் இடங்கள், சமூகம்னு எல்லாமே சவாலான இடங்கள் தான். ‘நல்ல வேலைக்கு போகலாம்’ என்று பலரும் சொல்லி இருக்கின்றனர். சிலர் கிண்டலாகவும், சிலர் நிஜ அன்பிலும் சொல்வர்.
அதேபோல, ஒரு வேலையை செய்வது ஆணா, பெண்ணா என்பதை பார்த்தும் நம் சமூகம் கருத்து சொல்கிறது. திறமைக்கு பதிலாக பாலினமே முன்னிலைப்படுத்தப்படும் சூழலும் நம் ஊரில் இருக்கிறது. அதையெல்லாம் கவனிக்க வேண்டியதில்லை என்று மிகவும் தாமதமாக புரிந்து கொண்டேன். வெற்றி தான் இங்கு பேசும். அதற்கு என்ன செய்யலாம் என்று கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
‘உன்னால முடியாது’ என்ற வார்த்தைகளை சாதாரணமா சொல்வாங்க; ஆனால், அதை கேட்டு கலங்கக்கூடாது என்பதை, என் அனுபவத்தில் மற்றவர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தேன்.
பலர் நமக்கு எதிராக இருந்தாலும், நமக்கு ஆதரவாகவும் சில நல்ல மனிதர்கள் இருப்பர். எங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும்,
நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக என் அண்ணன் இருக்கிறார். நம் முயற்சியை தொடர்ந்து செய்யணும். ஜெயித்த பின், எல்லாரும் உங்கள் திறமையையும், உழைப்பையும் கொண்டாடுவர்; அது தான் உலகம். அதுவரை பொறுமையையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது!
