/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பாரம்பரிய பலகாரங்களை 'மிஸ்' பண்ண வேண்டாம்!:சம்பாதிக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே துணை!
/
பாரம்பரிய பலகாரங்களை 'மிஸ்' பண்ண வேண்டாம்!:சம்பாதிக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே துணை!
பாரம்பரிய பலகாரங்களை 'மிஸ்' பண்ண வேண்டாம்!:சம்பாதிக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே துணை!
பாரம்பரிய பலகாரங்களை 'மிஸ்' பண்ண வேண்டாம்!:சம்பாதிக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே துணை!
PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

பாரம்பரிய பலகாரங்களை 'மிஸ்' பண்ண வேண்டாம்!
'ஊர்ல' என்ற நிறுவனம் சார்பில், நம் பாரம்பரிய பலகாரங்களை, உலகம் முழுதும் விற்பனை செய்து வரும், ஐ.டி., எனும் தகவல் தொடர்பு துறை முன்னாள் ஊழியர்களான, கோவையைச் சேர்ந்த அரவிந்த் சரவணபவன், பிரபாகரன் பாலசுந்தரம்:
அரவிந்த் சரவண பவன்: நான், சரவணகுமார் மோகன்ராஜ், பிரபாகரன் பாலசுந்தரம், காயத்ரி தேவி கணேஷ்ன்னு நாங்கள் நால்வர் தான், 'ஊர்ல' நிறுவனத்தை துவங்கினோம்.
காயத்ரி தேவி, 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறார்; நாங்கள் தமிழகத்தில் இருக்கிறோம். அவருக்கு, நம் ஊர் பலகாரங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்தது. அவரை போன்ற ஆதங்கத்துடன் இருக்கும் மற்ற இந்தியர்களையும் மனதில் வைத்து, 'ஊர்ல' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, பலகாரங்களை வாங்கி, விற்பனை செய்கிறோம்.
நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது, எல்லா ஊரின் பாரம்பரிய பலகாரங்களையும், அந்தந்த ஊர்களில் இருந்து வாங்கி, மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் ஐடியா; ஆனால், அத்தனை பலகாரங்களையும் எங்களால் உடனே கொண்டு சேர்க்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுத்தி வருகிறோம்.
'பலகாரப் பெட்டி' தான் எங்கள் முதல் தயாரிப்பு. அதில், 10 ஊர்களின் பாரம்பரிய பலகாரங்கள் இருக்கும். அந்தந்த ஊரின் பாரம்பரிய பலகாரத் தயாரிப்பாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, அனுப்புகிறோம்.
பிரபாகரன் பாலசுந்தரம்: தமிழகத்தின் பாரம்பரிய பலகாரங்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் பிரசித்தி பெற்ற பலகாரங்களையும் எங்களிடம் வாங்கி கொள்ளலாம். 25 லட்சம் ரூபாய் முதலீட்டில் வியாபாரத்தை துவக்கினோம்; தற்போது, ஓராண்டு, 'டர்ன் ஓவர்' 20 கோடி ரூபாய்.
ஆரம்பத்தில், அந்தந்த ஊரில் இருந்து, உயர்ந்த தரத்தோடு இருக்கும் பலகாரங்களை வாங்கி, கெட்டு போகாதபடி, 'பேக்' செய்து, வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அதை சாத்தியப்படுத்தும் சவாலில் ஜெயித்தது தான், எங்கள் தொழிலின் வெற்றியாக மாறியது.
இன்று, உலகம் முழுதும், 50 நாடுகளுக்கு பலகாரங்களை அனுப்பி வைக்கிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்காக, மஹாராஷ்டிராவின் பாரம்பரிய பலகாரங்கள் அடங்கிய பெட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இது தவிர தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சிறப்பான பலகாரங்களை வைத்து, 'தென்னிந்திய பலகாரங்கள்' என்று புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும், யாரும் அவர்களின் பாரம்பரிய பலகாரங்களை மிஸ் பண்ண தேவையில்லை; அதை, 100 சதவீதம் சாத்தியப்படுத்துவதுதான் எங்களின் அடுத்த இலக்கு!
சம்பாதிக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே துணை!
ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து முன் னேறிய, திருச்சியைச் சேர்ந்த ஷியாமளா:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தான் சொந்த ஊர். அம்மா, அப்பா, அக்கா,
தம்பி என, குழந்தை பருவத்தில் இருந்த சந்தோஷம் சீக்கிரமாக தொலைந்து போனது.
அம்மா திடீரென இறந்து விட்டதால், அப்பா எங்களை உறவினர் பராமரிப்பில் விட்டுவிட்டு, வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
சி ல நாட்களில், அப்பா எங்களை தொடர்பு கொள்வதையே நிறுத்தி விட்டார்.
உறவினரால், எங்கள் மூவரையும் பராமரிக்க முடியாத காரணத்தால், தம்பியை
மட்டும் வைத்துக் கொண்டு, அக்காவையும், என்னையும் திருச்சியில் ஒரு
ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்; அப்போது எனக்கு வயது, 5.
இல்லத்தில் நானும், அக்காவும் பள்ளி, கல்லுாரி வரை படிக்க உதவினர். எந்த
சுய பச்சாதாபத்தையும் என் மனதிற்குள் நுழையவிட மாட்டேன். 'மூச்சு பிடித்து
படிப்போம்; முட்டிமோதி முன்னேறிடலாம்...' என்பதையே மந்திரமாக எனக்குள்
சொல்லிக் கொள்வேன்.
பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவியாக
இருந்தேன். எதிர்பாராத தருணத்தில், எங்களிடம் இருந்த தொடர்பு அற்றுப்போன
அப்பா, எங்களை தேடி வந்தார்.
ஆனால், எங்களுக்கு கிடைத்த சிறிய
சந்தோஷமும் விதிக்கு பிடிக்கவில்லை; நான் பிளஸ் 1 படித்த போது அப்பா தவறி
விட்டார். இன்னொரு முறை, வாழ்க்கையில் முழுதுமாக உடைந்து அழுதோம்.
கல்லுாரி படிப்பை முடித்ததும், நான் வளர்ந்த இல்லத்தில் கணக்காளர் வேலை
பார்க்க ஆரம்பித்தேன். என் முதல் சம்பளத்தை வாங்கியது, மிகவும்
உணர்வுபூர்வமான தருணம்.
இந்த இல்லத்தில் இருந்து, நமக்கான வழியை
உருவாக்கி கொண்டு வெளியே சென்றால் தான், இந்த இடம் இன்னொரு மாணவிக்கு
கிடைக்கும் என எண்ணினேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார்
நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்து, இப்போது வரை தொடர்கிறேன். என்
அக்காவும் கல்லுாரி படிப்பை முடித்து, தற்போது போட்டி தேர்வுக்கு தயாராகி
வருகிறார்.
ஆதரவற்றோர், பள்ளி, கல்லுாரி தவிர வெளியுலகமே பார்க்காமல் வளர்ந்தேன். இப்போது நிறைய ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு கூட பயணிக்கிறேன்.
'இந்த உலகம் இவ்வளவு பெரிதா...' என்று வியக்கிறேன். தைரியம், சுயமரியாதை,
குறிப்பாக சுதந்திரம் எல்லாமே எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம்,
என் வேலை. நாம் சம்பாதிக்க ஆரம்பித்தால், யார் கையையும், யாரையும்
எதிர்பார்க்க வேண்டாம், நமக்கு நாமே துணை!