/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
குடும்பமும் உறவுகளும் தான் நிரந்தரம்!
/
குடும்பமும் உறவுகளும் தான் நிரந்தரம்!
PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

பிரபல நடிகை ரம்பா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். திருமணத்துக்கு முதல் நாள், மருதாணி வைக்கக்கூட நேரமில்லாத அளவிற்கு நடித்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருமணமானதும், எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு குடும்பத்திற்குள் வந்தேன். நடிகையர், திருமணம், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகளுக்காக நடுவில் ஒரு, 'பிரேக்' எடுப்பது சகஜம்தான். ஆனால் அதை நிரந்தரமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
நடிப்பில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டேன். கனடாவில் செட்டிலானோம். எனக்கு ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால், மூன்றுமே சிசேரியன் என்பதால், மருத்துவர்கள் இத்துடன் போதும் என்று கூறிவிட்டனர்.
கணவர், என்னிடம், 'நீ நடிப்பை தொடரணும் என்று நினைத்தால் தாராளமாக தொடர்ந்து நடி...' என்றுதான் கூறினார். ஆனால், எனக்கு குழந்தைகள், குடும்பம் என்று அழகான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது.
அதேபோல், ஒருநாள் கூட நான் சும்மா இருந்தது இல்லை. கணவரின் அலுவலகத்திற்கு சென்று, நானாக வேலைகளை கற்றுக் கொண்டேன். மூன்று குழந்தைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்திருக்கிறோம்.
அதனால், அவர்களை நானே கூட்டிச் சென்று, மாலை அவர்களை அழைத்து வருவது, சமையல் செய்வது என்று, என்னை மிகவும் பிசியாகவே வைத்துக் கொண்டேன்.
கணவருக்கும், எனக்கும் சண்டைகள் வந்துள்ளன. அந்நேரம், கணவரிடம், 'நான் யார் தெரியுமா நடிகை ரம்பா' என்று கூறுவேன். உடனே கணவர், 'இங்கு நீ ரம்பா இல்லை; அம்மா' என்றுதான் கூறுவார்.
சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்ததால் தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகள் ஆகியும், வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
நான் நினைத்திருந்தால், குடும்பத்தில் பிரச்னை வந்தபோது, துாக்கி போட்டுட்டு மறுபடி நடிக்க சென்றிருக்கலாம். ஆனால், அது எத்தனை காலத்திற்கு? குடும்பமும், உறவுகளும்தான் நிரந்தரம்.
வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பேசித் தீர்த்துக் கொள்வதற்கு இன்று பலருக்கும் பொறுமை இல்லை. 'ஈகோ' காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
கணவர் - மனைவி உறவுக்கு அடிப்படையே, பரஸ்பர மரியாதை தான். பொறுமையாக இருக்க முடியாது, மரியாதையும் கொடுக்க முடியவில்லை எனில், திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்.
பெண் இல்லாமல் ஆணோ, ஆண் இல்லாமல் பெண்ணோ வாழ முடியாது. இது ஆண்களுக்கான உலகமோ, பெண்களுக்கான உலகமோ இல்லை. இது, மனிதர்களுக்கான உலகம்!