PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

'தென்காசி மூத்தோர் மன்றம்' என்ற அமைப்பின் தலைமை பொறுப்பாளர் இலஞ்சியைச் சேர்ந்த, துரை.தம்புராஜ்: தற்போது, 92 வயதாகிறது. பூர்வீகம் ஆழ்வார்திருநகரி. பிறந்து வளர்ந்தது, கல்லுாரி படிப்பு எல்லாமே திருநெல்வேலி மாவட்டத்தில் தான்.
இந்தியா முழுக்க வேலை பார்த்தேன்; சில காலம் வெளிநாட்டிலும் வேலை பார்த்துள்ளேன். கடைசியாக, திருச்சி, 'பெல்' நிறுவனத்தில் பொது மேலாளரா இருந்து, 'ரிட்டயர்டு' ஆனேன். அதன்பின், கொஞ்சம் அமைதியாக வாழணும்னு இலஞ்சிக்கு வந்துட்டேன்.
வீட்டில் சும்மாயிருக்க முடியலை. பல நலச் சங்கங்களில் உறுப்பினரா சேர்ந்து, என்னால முடிந்ததை செய்துட்டு இருந்தேன். அப்போது, இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு என்னிடம் வந்தது. பல உறுப்பினர்களோடு பேசியபோது, சிலரின் பிள்ளைகள் வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பது தெரிந்தது.
அடுத்து, பல உறுப்பினர்களுக்கு பென்ஷன் வருது. மூத்த குடிமக்களின் முக்கிய பிரச்னை, கையில் பணம் இருந்தாலும் சரியான நேரத்தில் சுவையான, சத்தான சாப்பாடு தயாரிக்க முடியாமல் அல்லது வேலையாட்கள் கிடைக்காமல், வெளியே வாங்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர் என்பது தான்.
உறுப்பினர்களுடன் பேசி, இதற்கு சரியான தீர்வு காண எண்ணி, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் விலை, சமையலருக்கு சம்பளம், வினியோகிக்கும் செலவு என அனைத்தையும் கணக்கிட்ட போது, கொஞ்சம் கூடுதலாக தான் வந்தது.
இந்நிலையில், என் வீட்டின் ஒரு பகுதியை சமையலுக்கு ஒதுக்கி, கரன்ட் பில்லையும் நானே கட்டியதால், இட வாடகை, மின் செலவு குறைந்து, உணவுக்கான தொகையும் குறைஞ்சது.
காலை டிபன், மதியம் சத்தான சாப்பாடு மட்டும் தான் வழங்குகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, இப்போது வரை தொடரும் பணியில், 10 பேர் வரை வேலை பார்க்குறாங்க. ஒரு நாள் டிபன், சாப்பாட்டுக்கு, 110 ரூபாய் வரை ஆகும். சில நாள் கூடும், குறையும். அதை ஒரு மாதத்துக்கு கணக்கிட்டு, உறுப்பினர்களுக்கு அனுப்பிடுவோம். அவங்க அனுப்புற பணத்தை மளிகை சாமான்கள் வாங்கியதற்கும், வேலை செய்றவங்களுக்கும் கொடுத்துடுவோம்.
எத்தனையோ ஊர்கள்ல வேலை பார்த்திருக்கிறேன்; தங்கியிருக்கிறேன். அங்கெல்லாம் கிடைக்காத நிம்மதி, மன நிறைவு, எனக்கும், என் மனைவிக்கும், இதில் கிடைக்கிறது. ஊரைச் சுத்தி உறவுகள் நிறைஞ்சிருந்தாலும், எல்லாருக்கும் போகிற சாப்பாடு தான் எங்களுக்கும்.
அனைவருக்கும் நான் சொல்றது இது தான்... நீங்களும் உங்களுக்குப் பிடிச்சதைச் செய்யுங்க. நிறைவான வாழ்க்கை நிச்சயம் அமையும். முதுமைக்கான மரியாதை கிடைக்கும்!