/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சாவின் விளிம்பில் இருந்து மீண்டு எழுந்துள்ளேன்!
/
சாவின் விளிம்பில் இருந்து மீண்டு எழுந்துள்ளேன்!
PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் மாற்றுத்திறனாளியும், பிரபல தேசிய வாலிபால் விளையாட்டு வீராங்கனையுமான அருணிமா சின்ஹா:
உத்தர பிரதேசம்தான் என் பூர்வீகம். மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையில் சேர தேர்வெழுத, 2011- ஏப்ரல் 11ல் லக்னோவில் இருந்து டில்லிக்கு ரயிலில் கிளம்பினேன்.
ரயிலில், என் கைப்பை மற்றும் தங்கச்செயினை கொள்ளையர்கள் பறிக்க முயன்றபோது, அதை எதிர்த்ததால் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, எதிரில் உள்ள தண்டவாளத்திற்கு அருகில் விழுந்தேன்.
அப்போது, என் இடதுகால் தண்டவாளத்தின் மீது இருந்ததால், எதிரில் வந்த மற்றொரு ரயிலில் சிக்கி, துண்டானது.
என் நிலையை கணக்கில் கொண்டு, ரயில்வே அமைச்சகம் வேலை வழங்கியது. இருப்பினும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன், செயற்கை கால் பொருத்திக் கொண்டேன்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் ஆர்வத்துடன், உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறுதல் பயிற்சிக் கல்லுாரியில் சேர்ந்தேன்.
முதலில், செயற்கை கால் உதவியுடன் தீவு சிகரத்தில், 2012-ல் ஏறினேன். பின், 52 நாட்கள் கடின மலையேற்றத்திற்குப் பின், 2013 மே 21ல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தேன்.
இதன் வாயிலாக, 'எவரெஸ்ட் உச்சியை அடைந்த, உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி' என்ற பெருமையை பெற்றேன்.
என் திறமையைப் பாராட்டி மத்திய அரசு, 2015-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. என் அடுத்த இலக்கு, ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான சிகரங்களிலும் ஏறுவது.
ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள ஆறு சிகரங்களிலும், 2014ல் ஏறி முடித்தேன்.
கடந்த 2019 ஜனவரி 4ல், அண்டார்டிகாவில் உள்ள ஏழாவது சிகரத்திலும் ஏறி, 'உலகின் ஏழு கண்டங்களின் உயரமான சிகரங்களில் ஏறிய முதல் பெண் மாற்றுத்திறனாளி' என்ற பெருமையை பெற்றேன்.
பல ஆண்டுகளுக்கு முன், குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நான், சாவின் விளிம்பில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்துள்ளேன்.