/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எனக்கு வந்த குற்ற உணர்ச்சியை தான் படத்தில் காட்டினேன்!
/
எனக்கு வந்த குற்ற உணர்ச்சியை தான் படத்தில் காட்டினேன்!
எனக்கு வந்த குற்ற உணர்ச்சியை தான் படத்தில் காட்டினேன்!
எனக்கு வந்த குற்ற உணர்ச்சியை தான் படத்தில் காட்டினேன்!
PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள, டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது பெற்றோர் மாரிமுத்து - சித்ரா:
தந்தை மாரிமுத்து: எங்கள் சொந்த ஊர் நாகப்பட்டினம். படிப்பு, வேலை என குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டோம். அவன் இயக்குநராக போகிறேன் என்று கூறியபோது, 'வேணாம்ப்பா, சினிமாவில் போட்டி நிறைய இருக்கும்; ஜெயித்து வருவது ரொம்ப கஷ்டம்' என்று சொன்னேன்.
ஆனால், அவன் உறுதியாக இருந்ததால், விட்டுவிட்டோம் அவன் விருப்பத்தையும், சுதந்திரத்தையும் மதித்தோம். அவன் இப்போது எங்களை பெருமைப்படுத்தி விட்டான்.
அவன், எங்ககிட்ட செய்ததை தான் டிராகன் படத்தில், 90 சதவீதம் எடுத்து வைத்திருக்கிறான். எவ்ளோ கேட்டாலும் காசு கொடுப்பது, 'அப்பா நான் இருக்கேன்'னு சொல்றது எல்லாமே நான் சொன்னது தான்.
அதையெல்லாம் பார்த்ததும் அழுது விட்டேன். படத்தில் வரும் அப்பா கதாபாத்திரமான ஜார்ஜ் மரியன் பயன்படுத்தி இருப்பது, என் ஜோல்னா பை தான்.
படத்தை பார்த்த போது தான் எனக்கே தெரிந்தது... புள்ள மேல ரொம்ப பாசமா இருக்கோம்னு நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவன் எங்களுக்கும் மேலே பாசமாக இருக்கிறான் என்று!
அம்மா சித்ரா: எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் குழந்தை இல்லை. எங்களுக்கு தாமதமாக கொடுத்தாலும், பெஸ்ட்டான குழந்தையை கடவுள் கொடுத்துட்டார்னு நினைக்கிறோம். கல்லுாரி முடித்து விட்டு ஆறு மாதம் ஐ.டி.,யில் வேலை பார்த்தான்.
சம்பளத்தை, 1 ரூபாய் எடுக்காமல் அப்படியே கொண்டு வந்து கொடுப்பான். என்ன பிரச்னை எனில், அப்படத்தில் வருவது போன்று, கொண்டு வந்து கொடுக்கும் சம்பளத்தை, உடனே வாங்கிட்டு போயிடுவான்.
ஆனால், படத்தில் காட்டிய அளவுக்கு எம்புள்ள மோசம் கிடையாது. டிராகன் படம் வாயிலாக வட்டியும், முதலுமா பாசத்தை திருப்பி கொடுப்பான்னு நினைத்து கூட பார்க்கவில்லை.
அஸ்வத்: நான் காலேஜ் படிக்கும்போது, அரியர் வைத்திருக்கிறேன். அதன்பின் தேர்வு எழுதி பாஸாகி விட்டேன். ஆனால், இது எதுவுமே என் பெற்றோருக்கு தெரியாது. நான் என்ன சொன்னாலும் நம்பி ஏமாறுவாங்க.
'நாம என்ன சொன்னாலும் நம்புறாங்களே.... எல்லா சூழலிலும் நான் இருக்கேன்பான்னு அப்பா சொல்றாரே'ன்னு ஒரு குற்ற உணர்ச்சி வரும் இல்லையா... அதைத்தான் படத்தில் காட்டினேன்.
இப்படிப்பட்ட அப்பா - அம்மாவுக்கு பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அந்த நம்பிக்கையை பொய்யாக்க கூடாது என்று நான் உழைத்த உழைப்பு தான், என்னை சாதிக்க வைத்தது.
*****************
தமிழ்த்தாய் வாழ்த்தை அரபு மொழிக்குகொண்டு சென்றேன்!
திருக்குறளை முதன்முதலாக, அரபு மொழிக்கு எடுத்துச் சென்றுள்ள, சென்னை பல்கலைக்கழகத்தின் துறை தலைவர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட, முனைவர் ஜாகிர் ஹுசேன்:
கன்னியாகுமரி அருகில் உள்ள தக்கலையை சேர்ந்தவன் நான். சிறுவயது முதலே, எனக்கு தமிழ் மீது பற்று உண்டு. 10ம் வகுப்பு தேறிய நிலையில், என்னை இஸ்லாமிய அரபு மொழி இறையியல் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார் அம்மா.
பின், தனியாக சுயமுயற்சியில் மேல்நிலை பள்ளி படிப்பை படித்தேன். அச்சமயத்தில் அரபு மொழியில், 'பகாவி' படிப்பும் முடித்திருந்தேன். பின், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபு துறையில் சேர்ந்து முதுநிலை படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வையும் படித்தேன். இதுதான், தமிழ் மற்றும் அரபு மொழி வழியில் நான் பயணிக்க வாசல்களாக அமைந்தன.
அரபு மொழியின் ஆழம் உணர்ந்து, அம்மொழியை பயின்றிருக்கிறேன். அந்த மொழித்திறனை கொண்டு, அரபு மொழியில் இருந்து கவிதைகளை, தமிழில் நேரடியாக மொழியாக்கம் செய்து வந்தேன்.
பல இதழ்கள் அவற்றை கொண்டாடி இருக்கின்றன. இந்நிலையில், திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு செல்லும் பணியை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்னிடம் ஒப்படைத்தது. அதை செவ்வனே செய்து முடித்திருக்கிறேன்.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச அரபு கவிஞர்கள் மாநாட்டில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில், முதன் முதலாக குறளை அரங்கேற்றம் செய்தேன்.
சவுதியில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கிய படைப்பு என்ற பெருமை, திருக்குறளுக்கு கிடைத்தது.
வெறும் எழுத்து வடிவமாக மட்டும் இல்லாமல், குறளுக்கு இசை வடிவமும் கொடுத்து, அரபு மொழியில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.
அதற்கேற்ப, ஐந்தரை மணி நேரம் தமிழிலும், அரபு மொழியிலும் இசையுடன் திருக்குறளை அரங்கேற்றம் செய்திருக்கிறேன். இந்த அரங்கேற்றம் ஷார்ஜா, துபாய், மஸ்கட், மலேஷியா, குவைத் ஆகிய
நாடுகளிலும் நடந்தது.
அவ்வையார், பாரதி, பாரதிதாசன் ஆகியோரது படைப்புகளையும் அரபு மொழிக்கு கொண்டு சென்றுள்ளேன்.
தமிழர் மற்றும் அரேபியர் நட்புறவுக்கு இந்த மொழியாக்கம் பெரும் பாலமாக திகழ்கிறது. இந்த எண்ணத்தில் தான், தமிழ் இலக்கியங்களை அரபு மொழிக்கு கொண்டு செல்ல விழைகிறேன்.
இதன் இன்னோர் அம்சமாக, நம் தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை அரபு மொழிக்கு கொண்டு சென்றுள்ளேன். இந்த செயல்பாடு, அரபு மட்டும் தெரிந்தவர்களுக்கு தமிழின் இனிமையையும், சிறப்பையும் உணர செய்துள்ளது.