/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பேன்ட், டி - ஷர்ட் வாங்க காசின்றி புடவையிலேயே ஆட ஆரம்பித்தேன்!
/
பேன்ட், டி - ஷர்ட் வாங்க காசின்றி புடவையிலேயே ஆட ஆரம்பித்தேன்!
பேன்ட், டி - ஷர்ட் வாங்க காசின்றி புடவையிலேயே ஆட ஆரம்பித்தேன்!
பேன்ட், டி - ஷர்ட் வாங்க காசின்றி புடவையிலேயே ஆட ஆரம்பித்தேன்!
PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

சமூக வலைதளங்களில், 'டிரெண்டிங்' பாடல்களுக்கு புடவை கட்டி நடனமாடும், மதுரையைச் சேர்ந்த, 47 வயதாகும் மீனாட்சி: பிறந்து, வளர்ந்ததெல்லாம் மதுரையில் தான். அப்பா, குடிக்கு அடிமையாகி வீட்டுச் செலவுக்கு, 1 ரூபாய் கூட கொடுக்க மாட்டாரு. நாங்கள் மூன்று பிள்ளைகள்.
எங்களை வளர்க்க, பூக்கடை போட்டு அம்மா தான் வியாபாரம் செய்தாங்க. நானும், 12 வயதில் இருந்து பூ கட்ட ஆரம்பித்தேன்; 20 வயதில் திருமணமானது.
என் வீட்டுக்காரருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. வீடியோ கேசட் கடை வைத்திருந்தார்; லட்சக்கணக்கில் கடன் இருந்தது.
அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என, எல்லாவற்றையும் சகித்தபடி வாழ்ந்து வந்தேன். இரு பெண் குழந்தைகள் பிறந்தும் அவர் மாறவில்லை.
மன உளைச்சல் அதிகமாகி, தற்கொலைக்கு முயன்று, பிழைத்தேன். அதன்பின், என் பிள்ளைகளுடன் அம்மா வீட்டுக்கே வந்து விட்டேன்.
அம்மாவுடன் சேர்ந்து பூ வியாபாரத்தில் இறங்கினேன். இருந்த நகையை அடமானம் வைத்து, மதுரை காமராஜர் பல்கலையில், 'பியூட்டிஷியன் டிப்ளமா கோர்ஸ்' படித்தேன்.
சின்னதாக ஒரு பார்லர் ஆரம்பித்தேன். பூக்கடை, பார்லர், வீட்டு வேலை என்று அதிகாலை 4:00 முதல், இரவு 11:00 மணி வரை சாப்பிடாமல், துாங்காமல், 24 ஆண்டுகள் நான் பட்டபாடு சொல்லி மாளாது.
ஆண் துணையின்றி வாழ்ந்து விடலாம்; ஆனால், ஆண் சுமக்க வேண்டிய பாரத்தையும் சேர்த்து சுமப்பது கஷ்டம்.
இரு பெண்களையும் நன்கு படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து விட்டேன். என் அக்கா மகன், 'டான்ஸ் ஸ்டூடியோ' வைத்திருக்கிறான்.
வேடிக்கை பார்க்க போன இடத்தில், பொழுதுபோக்கிற்காக நான் ஆடியதை சமூக வலைதளத்தில் பதிவிட, அது டிரெண்டானது.
தற்போது, என் அக்கா மகன் ஸ்டூடியோவிலேயே டான்ஸ் கற்றுக் கொள்கிறேன். பேன்ட், டி - ஷர்ட் வாங்க காசில்லாமல், புடவையிலேயே ஆட ஆரம்பித்தேன்.
வீடியோ எடுப்பது, எடிட்டிங் எல்லாம் நானே கற்றுக் கொண்டேன். பார்லர் தொழிலில் போட்டி அதிகம்; பூ கட்டினால் கை வலி வருகிறது. அதனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, தற்போது ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறேன். அந்த சம்பளத்தில் நானும், என் அம்மாவும் வாழ்ந்து வருகிறோம்.
தனியாக போராடி, கடமையெல்லாம் முடித்த பின்னும், ஒரு பொண்ணு தனக்காக வாழ நினைப்பதை ஏன் தவறாக பார்க்கின்றனர் என்று தெரியவில்லை.
கமென்ட் அடிப்போர், எல்லா பெண்களையும் அம்மா, சகோதரி போன்று நினைக்க வேண்டாம்; ஆனால், அவர்கள் வாழ்க்கையில் அவர்களை வாழ விடலாமே!