/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாடு முழுதும் 42 நாட்கள் பைக்கில் பயணித்தேன்!
/
நாடு முழுதும் 42 நாட்கள் பைக்கில் பயணித்தேன்!
PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

சர்வதேச அளவிலான ரேஸ் பைக்குகளை பரிசோதித்து, அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்க உரிமம் பெற்றுள்ள சவுந்தரி: முதன் முதலாக, 8 வயதில் தனியாக சைக்கிள் ஓட்டியபோது இறக்கை முளைத்தது போல் இருந்தது. 12 வயதில் சைக்கிள் காதல், பைக் மீது திரும்பியது.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ரேஸ் டிராக்கை நேரில் பார்த்ததும், 'ரேசர்' ஆக முடிவு செய்தேன். கண்டிப்பாக ஒரு டிகிரி படிக்கணும்னு வீட்டில் கட்டாயப்படுத்தியதால், பி.இ., படித்தேன்.
பல போராட்டங்களுக்குப் பின், அம்மா 'யமஹா' பைக் வாங்கி கொடுத்தார். நான் பயிற்சி எடுத்த நேரத்தில், பெண்களுக்கென தனி ரேஸ் கிடையாது. ஆண்களுக்கான ரேசில் தான் பங்கேற்றேன்.
பெண் என்று ஏளனமாக பார்த்த ஆண்களை டிராக்கில் முந்தும்போது, ஒரு நம்பிக்கை கிடைத்தது. பைக் பயணம் இனிமையாக சென்ற நேரத்தில், மிகப்பெரிய விபத்தை சந்தித்து, மூச்சு பேச்சு இல்லாமல் மருத்துவமனையில் கிடந்தேன்.
விபத்துக்குப் பின், பைக் ரேசுக்கு வீட்டில், 'நோ' சொல்லி, திருமண பேச்சை எடுத்தனர். என் கணவரும் பைக் ரேசர் தான். என் கனவுகளை புரிந்து, வீட்டில் பேசி, மீண்டும் டிராக்குக்கு அழைத்துச் சென்றார். நான் கர்ப்பமாக இருந்த போதும் பைக் ஓட்டியுள்ளேன்.
ஹோண்டா நிறுவனம், பெண்களுக்கு பிரத்யேகமான முதல் ரேசை, 2016ல் அறிவித்தது. அப்போது, எனக்கு குழந்தை பிறந்திருந்தது.
உடல் நலத்தை காரணம் காட்டி, கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என அதில் பங்கேற்று, மூன்றாவது இடம் வந்தேன்.
அடுத்த ஆண்டே, டி.வி.எஸ்., நிறுவனம், இந்திய அளவில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பைக் ரேஸ் போட்டியை அறிவித்தது. அதில், இரண்டாவது இடம் பிடித்தேன்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, நாடு முழுதும் பைக்கில் பயணம் செய்தேன். 42 நாட்கள் பயணத்தில், 50,000க்கும் அதிகமான மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
நானும், கணவரும் ஸ்ரீபெரும்புதுாரில் ரேசர்களுக்கான பயிற்சி வகுப்பை துவங்கி, இதுவரை 2,000க்கும் அதிகமான ரேசர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். எனக்கு பைக் இன்ஜின் சார்ந்த வேலையிலும் ஆர்வம் இருந்ததால், அதற்கு தேவையான பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
மேலும், 'பெடரேஷன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆப் இந்தியா' அமைப்பு நடத்தும், ரேஸ் பைக் பரிசோதகருக்கான தேர்வை எழுதி வெற்றி பெற்றதால், இந்தியாவின் முதல் ரேஸ் பைக் பெண் ஆய்வாளர் என்ற அங்கீகாரம் எனக்கு கிடைத்துள்ளது.
தொடர்புக்கு
63836 88863

