/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
படிக்காத நான் தான் என் மகளுக்கு 'ரோல் மாடல்!'
/
படிக்காத நான் தான் என் மகளுக்கு 'ரோல் மாடல்!'
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

சென்னை கே.கே.நகர், பாரதிதாசன் காலனியில் உள்ள, 'புஷ்பா டெய்லர்ஸ்' உரிமையாளர் புஷ்பா:
என் கூடப் பிறந்தோர் இருவர். நான் பெண் பிள்ளையாக பிறந்து விட்டேன் என்று, பாட்டி வீட்டில் விட்டு விட்டனர். பாட்டிக்கு போலியோ தடுப்பூசி குறித்து எதுவும் தெரியாது. என் 2 வயதில் திடீர்னு ஒருநாள் காய்ச்சல். நடக்க முடியாமல் கால் இழுத்துக் கொண்டு விட்டது.
'போலியோ அட்டாக்' என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். 10 வயது வரை பாட்டி வீட்டில் தான் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை தான் படித்தேன். செல்லும் இடங்களில் எல்லாம் கேலி, கிண்டலுக்கு ஆளானதால், 'படிக்க விருப்பமில்லை' என்று கூறி, அப்பாவின் டெய்லர் கடைக்கு செல்ல ஆரம்பித்தேன்.
அப்பாவுடன் தினமும் கடைக்கு வந்து துணி வெட்டுவது, பட்டன் தைப்பது என அனைத்தும் கற்றுக் கொண்டேன். அப்பா இல்லாதபோது ஒருநாள் மிஷினில் உட்கார்ந்து தைத்து பார்த்தேன்; மிகவும் சிரமமாக இருந்தது.
அதனால், தினமும் அரை மணி நேரம் தைத்துப் பார்த்து மிஷினை கையாள ஆரம்பித்தேன். தைக்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தாலும், இரவில் உயிர் போகும் அளவிற்கு கால் வலிக்கும். ஆனாலும், 'நாம் படிக்கவில்லை. உடலில் குறை இருக்கிறது. அதனால், நமக்கு சம்பாத்தியம் முக்கியம்' என்று வெறித்தனமாக உழைக்க ஆரம்பித்தேன்.
எனக்கு, 20 வயதில் திருமணமானது. கணவர் டிரைவராக பணிபுரிகிறார். எனக்கு முழு ஆதரவு அவர்தான். அப்பாவுடன் சேர்ந்து தையல் கடையை பார்த்துக் கொண்டேன். குழந்தை பிறப்பதற்கு முதல் நாள் இரவு வரை தைத்துக் கொண்டே இருந்தேன். எனக்கு மகள் பிறந்த ஒரு மாதத்தில் என் அப்பா தவறி விட்டார். கடை பூட்டியிருந்தால் வாடிக்கையாளர்கள் வேறு கடையை தேடிச் சென்று விடுவர் என்பதால், கடைக்கு வந்து விட்டேன்.
கை குழந்தையை வைத்துக் கொண்டு, தைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், யாருக்கும் சிரமமாக இருக்க கூடாது என்று இரவு, பகலாக கஷ்டப்பட்டேன்.
என் காலுக்கு எழுந்து நிற்க கூட சக்தி இல்லை என்று கூறினர். ஆனால், அந்த கால் வாயிலாக மிஷினை அழுத்தி, 30 ஆண்டுகளாக என் பிழைப்பு நடக்கிறது. என் மகளை படிக்க வைத்து ஆளாக்கினேன். என் மகள் எம்.எஸ்சி., முடித்து விட்டு வேலைக்கு செல்கிறாள்.
படிக்காத நான்தான் அவளுக்கு, 'ரோல் மாடல்' என்கிறாள். இதை விட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நான் மாற்றுத்திறனாளி இல்லை. சூழலை மாற்றிய திறனாளி!