/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்வேன்!
/
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்வேன்!
PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM

தமிழகத்தில் இருந்து, 'எவரெஸ்ட் பேஸ் கேம்ப்' சென்ற இளம் வயது சாதனையாளர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கும் நெல்லையைச் சேர்ந்த, 6 வயது சிறுமி லலித் ரேணு மற்றும் கோவையைச் சேர்ந்த, 8 வயது சிறுவன் போஷித்:
லலித் ரேணுவின் தந்தை ஸ்ரீதர்: நாங்க, 'டிரெக்கிங்' செல்ல ஆரம்பித்த புதிதில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய தடுமாறினோம். அதன்பின் ஒரு, 'டிரெக்கிங் வாட்ஸாப்' குழுவில் சேர்ந்து, டிரெக்கிங் செல்ல ஆரம்பித்த பின் எளிதானது.
என் மகள், இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். மூன்று ஆண்டுகளில், பல இடங்களுக்கு மகளை டிரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளேன். கடந்தாண்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமி, எவரெஸ்ட் சிகரத்தின், 'பேஸ் கேம்ப்' சென்று, 'ரெக்கார்டு பிரேக்' செய்துள்ள செய்தியை பார்த்தோம்.
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் என்பது, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரமாகும். கடல் மட்டத்தில் இருந்து, 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அந்த செய்தியை பார்த்து, ரேணுவும் எவரெஸ்ட் செல்லலாம் என்று கூறினாள். விளையாட்டுக்கு கேட்கிறாள் என்று நினைத்து, சரி சொல்லி விட்டேன்.
ஆனால், பார்ப்பவர்களிடம் எல்லாம், 'எவரெஸ்ட் சிகரத்திற்கு போகப் போறேன்' என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
அதனால், மருத்துவர்களிடம் அட்வைஸ் கேட்டு, மூன்று மாதத்திற்கு முன்பே, மூச்சு பயிற்சி, சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டோம்.
லலித் ரேணு: ஒரு நாளைக்கு, 10 கி.மீ., நடந்தோம். மேலே செல்ல செல்ல ரொம்ப கஷ்டமாக இருந்தது. தண்ணீர் ஐஸ் மாதிரி இருந்தது. கடைசி மூன்று நாட்கள், 'எனக்கும் முடியவில்லை; கீழே போகலாம்' என்று அப்பா சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் நான், 'நோ' சொல்லி, ஓய்வு எடுத்து நடக்க ஆரம்பித்தேன்.
'பேஸ் கேம்ப்' போனதும் ரொம்ப ஜாலியாகி விட்டேன். நானும், அப்பாவும் சேர்ந்து, ரீல்ஸ் எடுத்தோம்; சிறிது நேரம் விளையாடினோம். வளர்ந்ததும், நிச்சயம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்வேன்.
போஷித்: கோவை தான் சொந்த ஊர். மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா டிரெக்கிங் செல்வதை பார்த்து தான், எனக்கும் ஆசை வந்தது.
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்வதற்கு இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் இருக்கும் அபார்ட்மென்ட், 14 மாடிகள் கொண்டது. அதை தினமும் எட்டு முறை ஏறி, இறங்குவேன். பேஸ் கேம்ப் பயணம் மொத்தம், 14 நாட்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு, 25 கி.மீ., கூட நடந்தேன்.
உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாளைக்கு, 5 கி.மீ., தான் ஏற முடிந்தது; ஆனாலும் கஷ்டப்பட்டு நடந்தேன். தொடர்ந்து டிரெக்கிங் செல்ல வேண்டும். நிறைய சாதிக்க வேண்டும்.
****************
வீடு திரும்பியதும் இல்லத்தரசியாக மாறி விடுவேன்!
திருநெல்வேலி அரசு சட்ட கல்லுாரியில் படிக்கும், 42 வயதாகும் ஜெயஷீலா: திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்தேன். கல்லுாரியில் எம்.பில்., முடித்தேன். ஓராண்டு, 'டிப்ளமா பியூட்டிஷியன்' படிப்பை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், 'கோல்டு மெடலுடன்' முடித்தேன்.'பியூட்டி பார்லர்' ஆரம்பிக்க போறேன் என்று கூறியதும் வீட்டில் எதிர்ப்பு. அதையும் மீறி, வீட்டிலேயே சிறிய அளவில் பார்லர்
துவக்கினேன்.
திருமணத்துக்கு பின் கணவர் ஊக்கப்படுத்த, நெல்லை வண்ணாரப்பேட்டையில் பார்லர் திறந்தேன்.எனக்கு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கும். அதிலும், என்னைச் சுற்றி இருக்கிற பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் கஷ்டப்
படுவதை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு கட்டத்தில், 'நாமே ஏன் சட்டம் படிக்க கூடாது... அப்படி படித்தால் சில பெண்களை காப்பாற்ற முடியுமே' என்று தோன்றியது. இதனால், திருநெல்வேலி அரசு சட்ட கல்லுாரியில், 2021ல் சேர்ந்தேன். கல்லுாரிக்கு முதல்நாள் சென்றதும், மாணவர்கள் என்னை, 'புரொபசர்' என்று நினைத்து, 'மேம்' என்று அழைத்தனர். நானும் மாணவி தான் என்று கூறியதும், அதிர்ச்சி, குழப்பம், சிரிப்பு என ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி; அதையெல்லாம் பார்த்து ரசித்தேன்.
அப்புறம் கேம்பஸ், வகுப்பு என சிறிது சிறிதாக பழக ஆரம்பித்தது.
என்னுடன் படிக்கும் மாணவியர் எல்லாம் என்னை அக்கா என, பாசமாக அழைக்க ஆரம்பித்தனர். எனக்கு இருந்த தயக்கம் விலகி, கல்லுாரி வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.
படிப்பில் ஏதாவது சந்தேகம் கேட்டால், பேராசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை அனைவரும் பொறுமையாக சொல்லி கொடுக்கின்றனர்.மதியம் தான் கல்லுாரி என்பதால், வீட்டு வேலைகள் அனைத்தையும் காலையிலேயே முடித்து விடுவேன். குழந்தைகள் பள்ளிக்கும், கணவர் வேலைக்கும் சென்று விடுவர்.
பார்லர் வேலைகளை யும், 'கோ ஆர்டினேட்' செய்து விடுவேன். மதியம் கல்லுாரிக்கு வந்து வகுப்பை முடித்து மாலையில் வீடு திரும்பி விட்டால், மாணவி என்ற ரோலில் இருந்து, இல்லத்தரசி ரோலுக்கு மாறி விடுவேன். அடுத்தாண்டு என் படிப்பு முடிந்து விடும். அதன்பின் வழக்கறிஞராக, 'பிராக்டீஸ்' ஆரம்பிக்க வேண்டும். பெண்களுக்கு பிரச்னை எனில் என்னிடம் வரலாம் என்ற அளவுக்கு என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். 43 வயதிற்கு பின் இதெல்லாம் ரொம்ப புதிதான, சவாலான அனுபவமாகத் தான் இருக்கப்
போகிறது. அதுதானே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்!