/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கடும் உழைப்பும் தொழிலும் தெரிந்தால் சாதனையாளராகலாம்!
/
கடும் உழைப்பும் தொழிலும் தெரிந்தால் சாதனையாளராகலாம்!
கடும் உழைப்பும் தொழிலும் தெரிந்தால் சாதனையாளராகலாம்!
கடும் உழைப்பும் தொழிலும் தெரிந்தால் சாதனையாளராகலாம்!
PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

பல தலைமுறைகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வாழ்ந்த குடும்பத்தில் இருந்து வந்து, இன்று மாதம் 1.50 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கும், விழுப்புரம் மாவட்டம், கயத்துாரைச் சேர்ந்த அய்யனார்: செங்கல் சூளையில் பகலில் வெயில் இருக்கும் என்பதால், பெரும்பாலான வேலைகளை இரவில் தான் செய்வோம். ஒரு நாளைக்கு இவ்வளவு கற்கள் அறுக்கணும் என்ற கணக்கு உண்டு.
அதன்படி, வெயில் வருவதற்குள் அறுத்துவிட்டு, மதியம் அந்த கல்லை காய வைப்போம். வேலையை சொல்லும் நேரத்தில் முடித்து கொடுத்தால், ஆண்டுக்கு 50,000 ரூபாய் சம்பளம் தருவர்.
நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் வெவ்வேறு ஜாதி என்பதால், பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நான் கடுமையாக உழைப்பதை பார்த்த என் மனைவி தான், தொழில் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையை என்னிடம் தெரிவித்தார்.
'யு டியூப்' வாயிலாக ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்க கற்று, 5,000 ரூபாய் முதலீட்டில் எங்கள் தொழிலை துவங்கி, படிப்படியாக வளர்ந்து, தயாரிக்கும் பொருட்கள் தேங்காமல் இருக்கும் அளவுக்கு கால் ஊன்றினோம்.
தற்போது சொந்தமாக இடம் வாங்கி தொழிற்கூடம் அமைத்திருக்கிறோம். சிறு முதலீட்டில் துவங்கிய என் தொழில் தற்போது, மாதம் 1.50 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' ஆக மாறியுள்ளது.
நாங்கள், பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மூலிகைகள் குறித்து தெரியும். மூலப் பொருட்களான மலைவேம்பு, அரகஜா, புனுகு, நொச்சி, வெள்ளை குங்கிலியம், பிசினின்னு வெள்ளியங்கிரியில் இருந்து வாங்குவோம்.
அவற்றை வைத்து ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியில் பல நறுமணங்களை தயாரிக்கிறோம். மொத்தமாகவும், சில்லரையாகவும் மட்டுமல்லாமல், யாராவது இதை செய்ய வந்தால் அவர்களுக்கு, 'ரா மெட்டீரியல்' கொடுத்தும், 'சப்போர்ட்' செய்கிறோம்.
ஆரம்பத்தில், கன்னியாகுமரிக்கு மட்டும் தான் கொடுத்துட்டு இருந்தோம். ஆனால், தற்போது சென்னை, சேலம், நாமக்கல் என்று பல மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கும் அனுப்புகிறோம். சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம்.
எங்கள் மக்களுக்கும் தயாரிப்பு முறைகளை கற்றுக் கொடுத்து, அவர்களும் இந்த தொழிலுக்கு வர ஊக்குவிக்கிறோம்.
இந்த தொழிலுக்கு எங்கள் குழந்தைகள் தான், 'ஏ.பி.கே.மயில் மாஸ்' என்று பெயர் வைத்தனர். கடுமையான உழைப்பும், தொழிலும் தெரிந்தால் போதும்... எவரும் சாதனையாளர்களாக மாறலாம்!
தொடர்புக்கு
79040 44562
96265 73971