/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எனக்கென ஓர் அடையாளத்துடன் இருப்பது மகிழ்ச்சி!
/
எனக்கென ஓர் அடையாளத்துடன் இருப்பது மகிழ்ச்சி!
PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

சணலில் விதவிதமான பைகள் தயாரிக்கும், 'ஆர்.கே., ஜூட் பேக்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணவேனி:
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன்.
எம்.எஸ்சி., படிக்க ஆசையுடன் இருந்தேன். ஆனால், அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிறிது நாட்களிலேயே எனக்கு திருமணம் ஆனது. கணவருடன் மதுரையில் என் புதுவாழ்வு துவங்கியது.
எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டுமென்று எப்போதுமே நினைப்பேன். எனக்கு சிறுவயது முதலே நேரத்தை வீணடிக்க பிடிக்காது. படித்து முடித்து வீட்டில் இருந்த காலத்தில் கூட, வீணாக நாட்களை கடத்தாமல், தையல் பயிற்சி, எம்பிராய்டரி, டைப்ரைட்டிங் என அனைத்தையும் கற்று கொண்டேன்.
திருமணமான பின், சணல் பைகள் எனும், 'ஜூட் பேக்ஸ்' செய்வதற்கான, 26 நாள் பயிற்சி வகுப்பிற்கு சென்றேன். பயிற்சியின் இறுதியில், ஒரு போட்டி நடத்தினர். அதில் எனக்கு தான் முதல் பரிசு கிடைத்தது.
அந்த பரிசு தான் எனக்குள் பிசினஸ் ஆர்வத்தை துாண்டியது. அதனால், வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் ஜூட் பேக் பிசினசை துவக்கினேன். முதலில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் தயாரிப்புகளை பார்த்தேன்.
அதிலிருந்து என் தயாரிப்புகள் எப்படி வேறுபட்டு இருக்க வேண்டும், அது வாடிக்கையாளர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுடன், தரமானதாகவும், நீடித்து உழைக்கும்படி இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்து கொண்டேன்.
'ஹேண்ட் பேக்ஸ்' மட்டுமின்றி, 'லஞ்ச் பேக், ஷாப்பிங் பேக், பர்ஸ், வாட்டர் பாட்டில் கவர், போல்டர் பைல்' மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் என அனைத்தும் செய்ய துவங்கினேன். பிசினஸ் நன்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென என் தந்தை இறந்தார். அடுத்த சில ஆண்டுகளில் கணவரையும் இழந்தேன்.
எனக்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த பிசினஸ் தான் ஆதரவு என்றான பின், முழு கவனத்தையும் இதில் செலுத்தினேன். சமூக வலை தளங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன்.
இன்று, இந்தியா முழுதும் எனக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். நான்கு பேர் என்னிடம் பணிபுரிகின்றனர். மாதம், 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
மதுரையில் ஒரு தனியார் பள்ளி மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இன்று யாரையும் சாராமல் எனக்கென ஓர் அடையாளத்துடன் இருப்பது, மகிழ்ச்சியை தருகிறது.