‘கடின உழைப்பே என் மகளுக்கு தொடர் வெற்றிகளை கொடுக்கிறது!’
‘கடின உழைப்பே என் மகளுக்கு தொடர் வெற்றிகளை கொடுக்கிறது!’
PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

காது கேட்காத, வாய் பேச முடியாத சூழலிலும் நடனம், ஓவியம் என அசத்தும் அரியலுார் மாவட்டம், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்த, கல்லுாரி மாணவி கிருஷ்ண வேணியின் தாய் மாலா:
என் மகளுக்கு சிறு வயதிலேயே நடனத்தில் விருப்பம் இருந்தது. சினிமா பாடல்களை கேட்கும்போது சிலர் நடனமாடுவர். ஆனால், என் மகளுக்கு அந்தப் பாட்டே கேட்காது.
அதனால், ஆரம்பத்தில் நடனம் கற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், அவளுக்கு நடனத்தில் இருந்த ஆர்வத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை.
இசைக்கு ஏற்ற மாதிரி நானே நடனம் ஆடி, சைகைகளால் அங்க அசைவுகளை சொல்லிக் கொடுப்பேன். என்னைப் பார்த்து வீட்டிலேயே பயிற்சி எடுத்துக் கொள்வாள்.
பள்ளி, கல்லுாரி நிகழ்ச்சிகளில் என் மகள் பங்கேற்கும்போதும், மேடைக்கு எதிரில் உட்கார்ந்து, இசையின் தாளத்துக்கு ஏற்ப சைகைகள் செய்வேன்.
அதைப் பார்த்தபடியே அவள் நடனமாடுவாள். அப்படித்தான் இப்போது நடனமாடுவது, அவளுக்கு எளிதான கலையாகவே மாறி விட்டது.
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான கரகாட்டம் ஆடுவது, அவளுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து பயிற்சி எடுத்து, 2021ம் ஆண்டு வித்தியாசமான சாதனையைச் செய்தாள்.
தலையில் கரகத்தை வைத்து நடனமாடியபடியே, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக வயல்வெளியில் நாற்று நட்டதைப் பார்த்து, நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.
இந்த சாதனை, ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’சின் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது..
குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் கவனம் செலுத்தி, பல போட்டிகளில் பங்கேற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களைப் பெற்றுள்ளாள்.
பாரதிதாசன் பல்கலையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாள்..
தினமும் காலையில் மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் என ஆறு மணி நேரம் பயிற்சி எடுத்து வருகிறாள்.
இந்த கடினமான உழைப்பே, அவளுக்குத் தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுக்கிறது. சிறு வயது முதலே படம் வரைவதிலும் அவளுக்கு ஆர்வம் உண்டு. ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளாள்.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற பெரிய கனவும் இருக்கிறது; அதெல்லாம் நடந்தால் சந்தோஷம்!
