சொல்கிறார்கள்: 'நிறைய பெண்கள் காவல் துறை பணிக்கு வரணும்!'
சொல்கிறார்கள்: 'நிறைய பெண்கள் காவல் துறை பணிக்கு வரணும்!'
PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

'நிறைய பெண்கள்
காவல் துறை
பணிக்கு வரணும்!'
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும், கலைவாணி:
கடந்த 2004-ம் ஆண்டு பொது இடத்தில் ஒரு பிரச்னையை பார்த்தேன். சுற்றியிருந்தவர்களால் தடுக்க முடியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டம் செய்தவர்களை உரிய முறையில் கையாண்டு, கூட்டத்தை கலைத்தனர். அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதைப் பார்த்தபோது தான், காவல்துறையின் சேவை, சமூகத்துக்கு எவ்வளவு தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்; நானும் காவல்துறை பணிக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பமும் வந்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து, என்னுடைய எல்லைக்குட்பட்ட அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் சென்று, 10 ஆயிரத்திற்-கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
தமிழக காவல் துறையின், 'காவல் உதவி செயலி'யை 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கல்லுாரி மாணவியர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதன்மூலம் காவல் துறையின் உதவியை எவ்வாறு பெற வேண்டும் என்றும், 5,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, செயலியை போன்களில் எப்படி பதிவு செய்து பயன்படுத்துவது எனவும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
குழந்தைகள் பாதுகாப்பிற்காக, '1098' மற்றும் பெண்களுக்காக, '181' உதவி எண்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறேன். 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது காப்பகங்களில் சேர்த்து, பாதுகாப்பான வாழ்க்கைக்கான ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.
ஒரு மாணவர் தவறு செய்த பின், அவரை தண்டிப்பதைவிட, அந்தத் தவறு நடப்பதற்கு முன்பே அதைத் தடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். காவல்துறை பணியில், 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். அதனால், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது; குடும்ப நிகழ்ச்சிகளைக்கூட தவறவிட வேண்டியிருக்கும். திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண் காவலர்களுக்கு, சவால்கள் இன்னும் அதிகம்; இரண்டையும் சமமாக கவனிக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட, பெண்களின் பங்களிப்பு முக்கியம். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். அதேபோல காவல் துறை பணிக்கும் அதிகளவில் பெண்கள் வர வேண்டும்.
