PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

ஐந்து தலைமுறையாக பாய் நெசவு தொழிலை செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த மைதீன் மீராள் மற்றும் அவரது பேத்தி மதினா பாத்திமா:
அந்த காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாத்து, கொள்வதற்காக பனை ஓலை, நாணல், கோரை புல்லில் பாய் முடைந்தனர். அதன்பின் காலத்துக்கேற்ற மாதிரி பாய் நெசவும் மாறிப்போனது. அந்த காலத்தில் எல்லா வீடுகளிலும் பாய் இருக்கும்.
பாய் நெசவை நம்பி, இங்கு நுாற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் விளையும் கோரைப்புல்லில் பாய் தயார் செய்கிறோம். கோரைப்புல் மெல்லிதாக இருக்கும்.
அதனால், இங்கு நெய்யும் பாய் ரகங்களும் பளபளப்பாக, மிருதுவாக இருக்கும். 'குலத்தொழிலை கட்டிக்காத்து மாட மாளிகையா கட்டிட்ட...' என்று பலர் கேட்பர். மாட மாளிகை கட்ட பணம் இருந்தால் போதும். பாரம்பரியத்தை காப்பாற்ற வைராக்கியம் வேண்டும். அது, எங்களுக்கு நிறையவே இருக்கிறது.
எந்த தொழிலில் தான் சிரமம் இல்லை... பாய் நெசவில் ஓரம் தைக்கிறது, கோரை கிழிப்பது, சாயம் போடுறது என நிறைய வேலைகள் இருக்கும். வேலைகளை பிரித்துக் கொள்வோம். வீட்டில் முடங்கி கிடக்காமல், உள்ளுரில் இருந்தே மாதம், 30,000 ரூபாய் சம்பாதிப்பது லேசான காரியமில்லை. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தொழில் இருக்கும்.
அதை அழியாமல் பார்த்துக் கொள்வது, அந்த தொழில் செய்பவர்களின் பொறுப்பு. அந்த தொழிலாளர்களை காப்பாற்ற மக்களும் முயற்சி எடுக்க வேண்டும். பஞ்சு மெத்தை இருக்கட்டும்... பாரம்பரியத்தை காப்பாற்ற பாய்களும் வாங்குங்கள்.
மதினா பாத்திமா: நான், 32 ஆண்டுகளாக பாய் நெசவு செய்கிறேன். பாய் நெசவு நுணுக்கமானது. தாமிரபரணி ஆற்றங்கரையில் கோரைப்புல் வாங்குவோம். 10 கட்டு கோரைப்புல், 18,000 ரூபாய். ஒரு கட்டு புல்லுக்கு இரண்டு பாய் நெய்யலாம்.
முதலில் புல்லின் ஓரங்களை சமமாக வெட்டி, இரண்டு நாள் தண்ணீரில் ஊறவைத்து காய வைக்க வேண்டும். அதன்பின், கத்தியால் கீறி, புல்லுக்கு நடுவில் இருக்கும் பகுதியை வெளியே எடுக்க வேண்டும்.
இதை, 'சீங்கி' என சொல்வோம். திரும்ப வெயிலில் காய வைத்து சாயம் போடுவோம். இயற்கை சாயம், ரசாயன சாயம் என இரண்டு வகை இருக்கிறது. வாடிக்கையாளர்கள் என்ன வகை கேட்கின்றனரோ, அதை செய்வோம்.
சாயம் காய்ந்ததும், கோரையை தண்ணீரில் முக்கி எடுத்து, ஈரப்பதத்துடன் நெசவை ஆரம்பிக்க வேண்டும். தறியில் சீரான இடைவெளியில் நுாலை கோர்த்து, நுால்களுக்குள்ளே கோரைகளை விட்டு நெசவு செய்வோம். தோள்பட்டை, கழுத்தெல்லாம் வலி எடுக்கும். ஆனால் பழகிப்போச்சு!