'மாமியார், அம்மாவின் சந்தோஷத்தை காப்பாற்ற வேண்டும்!'
'மாமியார், அம்மாவின் சந்தோஷத்தை காப்பாற்ற வேண்டும்!'
PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM

ஊடகத் துறையில் பிரபலமாகி இருக்கும், திண்டுக்கல் மாவட்டம், ஓபுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்திப்ரியா: பழனி பக்கத்தில் இருக்குற ஓபுலாபுரம் தான் எங்கள் ஊர்; சரியான பஸ் வசதி கூட கிடையாது. எனக்கோ வானத்தை தொட ஆசை; நிறைய கனவுகள் இருந்தன; ஆனால், பாதை காட்டத்தான் யாரும் இல்லை.
அப்பா சமையல் மாஸ்டராகவும், அம்மா கூலி வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். இருவருக்குமே வெளி உலகமே தெரியாது; ஆனால் நான், 'படிக்கணும், வேலைக்கு போகணும்'ன்னு சொல்லும்போதெல்லாம், 'நீ படிம்மா' என்று கூறுவர்.
அப்பா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது, 'டிவி'யில் என்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், 'இதை பார்க்க அப்பா இல்லையே' என்று மனம் பாரமாகி விடும். அவர் உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் ஊர் முழுக்க கொண்டாடி மகிழ்ந்திருப்பார்.
நான் படித்தபோது, ஊடகத் துறை குறித்து எந்த யோசனையும் இல்லை. ஒரு நாள் என் தோழி ஒருத்தி, 'நீ நல்லா பேசுற... ஊடகத் துறைக்கு போகலாமே' என்று சாதாரணமாக கூறினாள். ஆனால், அவள் கூறியது, என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இன்ஜினியரிங் முடித்ததும், சென்னையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
வேலை பார்த்தபடியே, விடுமுறை நாட்களில் எந்த, 'யூ டியூப் சேனலில்' வாய்ப்பு கிடைக்கும் என்று தேடிச் செல்வேன். ஒரு கட்டத்தில், வேலையை விட்டு விட்டு வாய்ப்பு தேடினேன்.
கடைசியாக, ஒரு சேனலில் வேலை கிடைத்தது. பின்னணி குரல் கொடுப்பது, சிறு சிறு காணொளிகள் எடுப்பது என செய்து கொண்டிருந்தேன். அப்போது நண்பர் ஒருவர், 'தேநீர் இடைவேளை என்ற சேனலில் ஆள் எடுக்கின்றனர்' என்று கூறினார்.
அங்கு, ஒரு தலைப்பு குறித்து பேசி வீடியோ அனுப்ப சொல்லி இருந்தனர்; நானும் அனுப்பினேன். அந்த வீடியோவை பார்த்து விட்டு என்னை தேர்வு செய்தனர்.
அதன்பின், குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் என்னுடன் வேலை பார்த்தவரையே காதலித்து, திருமணம் செய்து கொண்டேன்.
சில மாதங்களுக்கு முன், 'ஜீ தமிழ்' என்ற தனியார் சேனலில் ஒளிபரப்பாகும், 'மகா நடிகை' நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்வானேன். பொதுவாக பெண்கள் கருப்பசாமி வேடம் போட மாட்டார்கள். நான் கருப்பசாமி வேடம் போட்டதை பார்த்த மக்கள் ஏற்றுக் கொண்டு, என்னை வாழ்த்தினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் மாமியார், 'என் மகளை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்று கூறினார். மாமியார் மற்றும் அம்மாவின் சந்தோஷத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்!
