PUBLISHED ON : செப் 28, 2026 02:26 AM

கப்பல்களில் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும், 'கன்டெய்னர்' எனும் கொள்கலன்களை சிறு வீடுகள் மற்றும் அலுவலகங்களாக மாற்றித் தரும், சென்னையைச் சேர்ந்த, 58 வயது ப.வான்மதி:
நான் பிறந்தது நெய்வேலி; வசதியற்ற வாழ்க்கை. பெண் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில், அப்பா உறுதியாக இருந்தார். 15 வயது முதல் சம்பாதிக்கத் துவங்கி, என் படிப்புச் செலவை பார்த்துக் கொண்டேன்.
அப்பாவின் திடீர் மறைவுக்கு பின், சென்னைக்கு வந்து, கன்டெய்னர் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். 14 ஆண்டுகள் மண்டல மேலாளராக பதவி உயர்வு பெற்றேன். அடுத்த பதவி உயர்வுக்கு, வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வேலையை விட்டுவிட்டேன்.
அடுத்த நாளே, ஒரு நண்பரின் அலுவலகத்திற்கு அருகே மரத்தடியில், நான், என் கணவர், ஒரு பெயின்டர் என, மூன்று பேரும் அமர்ந்து கொண்டோம். எனக்கு தெரிந்த வாடிக்கையாளர்கள் சிலர் கன்டெய்னர்களை கொடுத்து, பழுது பார்க்குமாறு கூறினர்.
சில மாதங்களில் அங்கேயே ஒரு கன்டெய்னரை அலுவலகமாக மாற்றி, வேலை செய்ய ஆரம்பித்தோம். அதைப் பார்த்ததும் பலர், 'எங்களுக்கும் இது போல ஆபீஸ் வேண்டும்; பெட்ரோல் பங்க்கில் இப்படி ஒன்று அமைத்துக் கொடுங்கள்' என கேட்கத் துவங்கினர்.
தொடர்ந்து முழு வீடுகளும் கட்டிக் கொடுக்கத் துவங்கினோம். மற்றவர்கள் போடும் பாதையில் நடந்து போவது சுலபம்; ஆனால், நாமாக பாதையை உருவாக்கி அதில் சென்றால், நமக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்!
தொழிலதிபர் ஆன பின், நிறைய பத்திரிகைகளில் இருந்து பேட்டி எடுத்தனர். 'மீடியாவிற்கு இவ்வளவு சக்தியா...' என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
சிறு வயதிலேயே, 'தினமலர் - வாரமலர்' புத்தகத்துக்கு சிறு சிறு கடிதங்கள் எழுதிய பழக்கம் உண்டு. அந்த பழக்கத்திலும் வெறித்தனமாக புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருப்பதாலும், 'பாவையர் மலர்' பத்திரிகை துவங்கினேன்.
இந்த புத்தகத்தில், கோலம் போடுவது எப்படி, சமையல் செய்வது எப்படி என்பதெல்லாம் இருக்காது; தெளிவான சிந்தனை, கல்வி அறிவு, சமூகப் பார்வை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை பற் றிய செய்திகள், கட்டுரை கள், கதைகள் மட்டுமே இருக்கும்.
இந்த இதழ் துவங்கி, 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'பாவைமதி' என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறேன்; 100 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டு இருக்கிறேன்.
பெண்களால் முடியாதது என்று எதுவும் இல்லை; முயற்சி மட்டுமே தேவை. பொருளாதார ரீதியாக பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. முன்னேறிய நாடுகள் பட்டியலில் எந்த நாடு இடம் பிடிக்கிறதோ, அந்த நாட்டில் பெண்கள் நிச்சயம் முன்னேறி, பொருளாதார சுதந்திரம் அடைந்திருப்பர்!
தொடர்புக்கு
95001 14229
