தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'என் கண்டுபிடிப்புகள் இயற்கை வளங்களை பாதிக்காமல் இருக்கும்!

'என் கண்டுபிடிப்புகள் இயற்கை வளங்களை பாதிக்காமல் இருக்கும்!

'என் கண்டுபிடிப்புகள் இயற்கை வளங்களை பாதிக்காமல் இருக்கும்!


PUBLISHED ON : அக் 11, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, சேலம் மாவட்டம், பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி நேத்ரா:

கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பா எங்களுடன் இல்லை. நானும், அம்மாவும், தாத்தா - பாட்டியுடன் தான் இருக்கிறோம். தாத்தா, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். எனக்கு ஐந்தாம் வகுப்பு வரை படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை; ஆறாம் வகுப்பு சென்றபோது, கொரோனா ஊரடங்கு வந்தது.

அந்நேரத்தில், 'யூ டியூப்' வாயிலாக

கம்ப்யூட்டர் துறையில் பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டேன்.

எட்டாம் வகுப்பு படித்தபோது, பள்ளி ஆசிரியை கொடுத்த ஊக்கத்தால், நம் திறன்கள், சாதனைகள், அனுபவங்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் தொழில் முறையாக காட்டும் தனிப்பட்ட இணையதளமான மாதிரி தொகுப்பு ஒன்றை உருவாக்கினேன்.

மேலும், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடத்தப்படும், 'பள்ளி மாணவர்களை இணைக்கும் திட்டம்' வாயிலாக, செயற்கை நுண்ணறிவு உட்பட பல சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாகவே கற்றேன். 10ம் வகுப்பில் 325 மதிப்பெண்கள் தான் எடுத்தேன்; அதற்காக வருத்தப்படவில்லை.

மதிப்பெண்ணை விட என் திறமைகளை நம்பினேன். அதனால் பள்ளிக்கல்வியுடன், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தேன்.

சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்கு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தீர்வு கண்டுபிடிக்க முயற்சி செய்ய துவங்கினேன்.

முதலில், 'ஸ்மார்ட்' நீர்ப்பாசன திட்டமிடல் பரிசோதனைக்காக ஒரு செயலியை உருவாக்கினேன்; அதன் வாயிலாக ஒரு புகைப்படத்தை வைத்தே, நீரின் தன்மைகளை புரிந்து கொள்ள முடியும்.

இந்த கண்டுபிடிப்பிற்காக, இங்கிலாந்தின் அறிவுசார் காப்புரிமை கழகத்தில் காப்புரிமையும் வாங்கினேன்.

பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை, விவசாயிகளுக்கு ஸ்மார்ட் நீர்ப்பாசன திட்டம், மின்சார சேமிப்புக்கான செயற்கை நுண்ணறிவு அமைப்பு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஸ்மார்ட் செருப்பு, எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய, 'ஸ்மார்ட் கீ போர்டு' மாதிரியான பொருட்களை வடிவமைத்து, காப்புரிமைகள் வாங்கியுள்ளேன்.

சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் 20 பேருடன் சேர்ந்து, 'அனெக்ஸ்ரா' என்ற இணைய செயலி நிறுவனத்தை துவங்கி பதிவு செய்திருக்கிறேன்; இதன் வாயிலாக, பயன்படுத்துவதற்கு எளிய செயலிகளை உருவாக்கி கொடுத்து வருகிறோம்.

ஆலோசனை மூலமாக இந்த ஆறு மாதங்களில், 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானமும் வந்திருக்கிறது. என் அத்தனை கண்டுபிடிப்புகளும், இயற்கை வளங்

களை பாதிக்காமல், சமூகத்தின் வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும்.

'பகலில் ஆட்டோஓட்டும் தொழில் மாலையில் குதிரை சவாரி!'


சென்னை மெரினா பீச்சில், குதிரை சவாரி அழைத்து செல்லும் கனகலட்சுமி: நான், பி.காம்., முடித்துள்ளேன். எனக்கு குதிரைகளை அறிமுகப்படுத்தியது அப்பா தான்; பீச்சில், 12 குதிரைகளை வைத்து தொழில் நடத்தி வந்தார். புழுதி பறக்க குதிரையில் அவர் வருவதை பார்த்து தான், எனக்கும் குதிரை ஓட்டும் ஆசை வந்தது. 7 வயதில் கடிவாளம் பிடிக்க ஆரம்பித்து, 12 வயதில் குதிரை ஏற ஆரம்பித்தேன்; 17 வயதில் குதிரை சவாரி தொழிலுக்கு வந்து விட்டேன்.

குதிரைக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடற்பயிற்சியும் முக்கியம். தினமும் அது நடக்கணும், ஓடணும்... செரிமானம் ஆகவில்லை எனில் வயிற்று வலி ஏற்பட்டு, சில நேரங்களில் இறந்து விடும்.

கொரோனா ஊரடங்கில் எங்கள் குதிரைகளை வெளியில் அழைத்து செல்ல முடியாமல், ஒவ்வொன்றும் உடல்நிலை மோசமாகி இறந்து விட்டன. இப்படி 11 குதிரைகளையும் இழந்தபோது, சகோதரனை இழந்த வலி ஏற்பட்டது; கதறியபடியே லாயத்திலேயே அவற்றை புதைத்தோம்.

குதிரைகள் இறந்த பின் அப்பா, 'இந்த தொழிலே வேண்டாம்' என்று முடிவு செய்து, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். மீதியிருந்த ஒரு குதிரையை என்னிடம் கொடுத்து விட்டார். அப்போது என் வயது 17.

பள்ளி விட்டு வந்ததும், அந்த குதிரையை நடை பயிற்சிக்கு மெரினாவுக்கு அழைத்து சென்ற இடத்தில், சிலர் சவாரிக்கு கேட்டனர்; ஓரளவுக்கு வருமானம் வர ஆரம்பித்தது; இதையே செய்யலாம் என்று தோன்றியது.

மெரினா பீச்சில் 70 பேர் குதிரை சவாரி தொழில் செய்கின்றனர்; அதில், 69 பேர் ஆண்கள்; நான் ஒருத்தி தான் பெண். ஆனால், என்னை நான் வேறுபடுத்தி காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

ஓவர் கோட், தொப்பி என, என் உடையையே மாற்றிக் கொண்டேன்.

அப்பா இரவில் தான் ஆட்டோ ஓட்டுவார். நான் காலை முதல் மாலை 3:00 மணி வரை ஆட்டோ ஓட்டுவேன். மாலை 4:00 மணிக்கு குதிரையுடன் மெரினா பீச் வந்தால், இரவு 8:00 மணிக்கு குதிரையை லாயத்திற்கு அழைத்து சென்று விடுவேன்.

இப்படி சம்பாதித்து, அடுத்தடுத்து எட்டு குதிரைகள் வாங்கினேன். வேலைக்கு ஆட்கள் வைத்து கடனை அடைத்து விட்டேன்.

காலையில் ஆட்டோ, மாலையில் குதிரை சவாரி... இதற்கு நடுவில் பி.காம்., படித்து முடித்தேன். போலீஸ் குதிரை படையில் நிறைய பெண்கள் இருக்கின்றனர்.

கடலில் யாரும் விழுந்து விடாமல் இருக்க, அவர்கள் மெரினா பீச் முழுதும் ரோந்து சுற்றி வருவர். அது மாதிரி நானும் சீருடை அணிந்து வர வேண்டும் என்பது என் கனவு; அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும்.

வேலைக்கு போனாலும், என் குதிரைகளை ராஜா போல பார்த்துக் கொள்வேன். Image 1629077

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us