/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நம் இளைஞர்களில் ஒருவர்கூட இனி ஏமாறக்கூடாது!
/
நம் இளைஞர்களில் ஒருவர்கூட இனி ஏமாறக்கூடாது!
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் ஏமாறாமல் இருக்க, 'பாத்து போங்க' என்ற பெயரில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த, ஐ.எப்.எஸ்., அதிகாரி ராஜ்குமார்: சமீபகாலமாக, 'சைபர் ஸ்லேவரி' என்ற பேராபத்து வலையில், நம் தமிழக இளைஞர்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை, 'டார்கெட்'டாக வைத்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரிய, 'குரூப்'பே இயங்கிக் கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில், 'எந்த முன் அனுபவமும் தேவையில்லை; மாதம் 70,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்; ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் போதும்.
கால்சென்டர், டெலி மார்க்கெட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு இளைஞர்கள் தேவை; தங்குமிடம், உணவு இலவசம்' போன்ற இனிப்பான விளம்பரங்களை பார்த்து, நம் இளைஞர்கள் ஏமாந்து போகின்றனர்.
மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில், ஆன்லைன் மோசடி கம்பெனிகள், பல மாடி கட்டடங்களில், சாப்ட்வேர் நிறுவனங்கள் போல் இயங்கி வருகின்றன.
வெறும் டைப்பிங் டெஸ்டை வைத்து, நம் தமிழ் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆர்டரை கமுக்கமாக கொடுத்து விடுகின்றனர். இளைஞர்களும், முகவர்களிடம் பணம் கட்டி, அந்த நாடுகளுக்கு சென்று இறங்கி விடுகின்றனர். அங்கு சென்றதும் தான், இரண்டு விஷயங்கள் தெரிய வரும்...
அதாவது, முகவர்கள் தங்களை அனுப்பி வைத்தது, வெறும் டூரிஸ்ட் விசாவில் என்பதும், தாங்கள் அழைத்து வரப்பட்டது, முழுக்க முழுக்க ஆன்லைனில் மோசடிகள் செய்வதற்காகத் தான் என்பதும் தெரிய வரும்.
அதைவிட பெரிய அதிர்ச்சி... 'நான் திரும்ப ஊருக்குச் செல்கிறேன்' என்று கூறினால், அவர்களை மிக மோசமாக நடத்துவர். மீறி எதிர்த்தால், தனி அறையில் அடைத்து, சித்ரவதை செய்து பணிய வைக்கின்றனர்.
அந்தந்த நாடுகளில் இருக்கும் நம் துாதரக அதிகாரிகள் வாயிலாக, நம், 'சைபர் கிரைம்' போலீஸ் மற்றும் அந்த நாடுகளின் துாதரகங்கள் உதவியுடன் நம் இளைஞர்களை மீட்டு வருகிறோம்.
நமது, emigrate.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏஜன்ட்கள் வாயிலாக நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு சென்றால், பாதுகாப்பாக இருக்கலாம். டூரிஸ்ட் விசாவில், எந்த நாட்டுக்கும் வேலைக்கு செல்லாதீர்கள்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 200க்கும் அதிகமான ஏஜன்ட்கள் வாயிலாக, வெளிநாட்டு வேலைக்கு செல்வதை உறுதி செய்யுங்கள்.
இனி, இதுபோன்ற போலி விளம்பரங்களை பார்க்க நேரிட்டால், 90421 49222 என்ற எண்ணில் தெரிவியுங்கள்.
வரும் முன் காப்பது நல்லது என்பதால், 'பாத்து போங்க' என்பதையே இதற்கான விழிப்புணர்வு வாசகமாக முன்னெடுத்துள்ளோம். நம் இளைஞர்களில் ஒருவர்கூட இனி பாதிக்கப்படக் கூடாது.