/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பறவைகளுக்கான வாழ்விடங்களை தயார் செய்வதால் எனக்கும் வாழ்வு!
/
பறவைகளுக்கான வாழ்விடங்களை தயார் செய்வதால் எனக்கும் வாழ்வு!
பறவைகளுக்கான வாழ்விடங்களை தயார் செய்வதால் எனக்கும் வாழ்வு!
பறவைகளுக்கான வாழ்விடங்களை தயார் செய்வதால் எனக்கும் வாழ்வு!
PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

சுரைக்காய்களை நன்கு முற்ற விட்டு, அதன்பின் அறுவடை செய்து பதப்படுத்தி, பறவைகளுக்கான கூடுகள் தயார் செய்து விற்பனை செய்து வரும், விருதுநகர் மாவட்டம், சின்னமூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பூமிநாதன்:
தாத்தா, அப்பா இருவருமே மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். 'எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன்' பட்டப் படிப்பு முடித்து, சொந்த ஊருக்கே திரும்பி வந்து, அரசு போட்டி தேர்வுக்கு என்னை தயார்படுத்திட்டு இருந்தேன்.
எந்நேரமும் படித்தபடியே இருந்ததால், அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டது. என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள, வீட்டின் பின்னால் இருக்கும் 2 சென்ட் நிலத்தில் தோட்டம் அமைத்து, காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். பின், 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, காய்கறிகள் சாகுபடி செய்தேன்.
விதைகளை எடுத்துட்டு வெளியில போட்டு வைத்திருந்த சுரைக்காய்கள் என் கவனத்தை ஈர்த்தன. நன்கு காய்ந்து போய் உறுதி தன்மையுடன் இருந்தன. இதை குப்பையில் வீசாமல் ஏதாவது பயனுள்ள பொருளாக மாற்றலாம் என்ற யோசனை வந்தது.
இது சம்பந்தமாக இணையத்தில் தேடியபோது, குடுவை சுரையில் பறவை கூடு செய்யலாம் என்று தகவல் கிடைத்தது. பலமுறை முயற்சி செய்து பறவைகளுக்கான கூடுகளை வெற்றிகரமாக தயார் செய்தேன். அதை நண்பர்களுக்கு பரிசாக கொடுத்தேன்; பாராட்டுகள் கிடைத்தன.
கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் நண்பர் ஒருவர், 20 பறவை கூடுகள் விலைக்கு வேண்டும் என்று கேட்டார். உடனே தயார் செய்து கொடுத்தேன். தொடர்ச்சியாக வாங்க ஆரம்பித்தார்.
சுரைக்காய்களை விற்பனை செய்வதைவிட, பறவை கூடுகளாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ததில் பல மடங்கு லாபம் கிடைத்தது. அதனால், 50 சென்ட் நிலத்தில் இரண்டு ஆண்டுகளாக சுரைக்காய் பயிரிட்டு, பறவைகள் கூடுகள் மட்டும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன்.
மொத்தம், 1,200 காய்கள் கிடைத்தன. சேதாரம் போக, 1,100 காய்களை பறவை கூடுகளாக மதிப்பு கூட்டி விற்பனை செய்தேன். கூடுகளோட வடிவத்தை பொறுத்து விலை மாறுபடும். குறைந்தபட்சம் 50 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 300 ரூபாய் வரை கிடைத்தது. 1,100 கூடுகள் விற்பனை வாயிலாக, 1.71 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதில் உழவு முதல் அறுவடை வரை 18,000 ரூபாய் தான் செலவானது. என் உழைப்புக்கான கூலி 3,000 ரூபாய். மீதி, 1.50 லட்சம் ரூபாய் எனக்கு லாபம். பறவைகளுக்கான வாழ்விடங்களை தயார் செய்து கொடுப்பதன் வாயிலாக, எனக்கும் வாழ்வு கிடைக்கிறது.
தொடர்புக்கு:
99420 80100