/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உலர் காய்கறிகள் துாள் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் லாபம்!
/
உலர் காய்கறிகள் துாள் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் லாபம்!
உலர் காய்கறிகள் துாள் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் லாபம்!
உலர் காய்கறிகள் துாள் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் லாபம்!
PUBLISHED ON : டிச 17, 2025 03:14 AM

வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போன்றவற்றை காய வைத்து உலர் பொருளாகவும், துாளாகவும் மாற்றி விற்பனை செய்து வரும், மஹாராஷ்டிரா மாநிலம், ஜல்காவ் மாவட்டம், பலஸ்கேடா கிராமத்தைச் சேர்ந்த வந்தனா பிரபாகர்: கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளேன்.
இல்லத்தரசியாக மட்டுமே இருந்து வந்த நான், தற்போது ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வருவதற்கு முதல் காரணம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான்.
மற்ற பெண்கள் வழக்கமாக செய்யக்கூடிய அப்பளம், ஊறுகாய், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற பொருட்கள் தயார் செய்யும் தொழிலில், நாம் ஈடுபடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
இதனால், எங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகினேன். அங்குள்ள விஞ்ஞானிகள் என்னை ஊக்கப்படுத்தியதுடன், காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்துவதற்கும், அவற்றில் இருந்து துாள் தயார் செய்வதற்கும் முறையான பயிற்சிகள் கொடுத்தனர்.
என்னிடம் உள்ள சூரிய ஒளியில் காய்கறிகளை உலர்த்தும் இயந்திரத்தில், தினமும், 100 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை உலர வைக்கலாம். பிரத்யேகமான கூரையில் அமைக்கப்பட்ட கொட்டகை வாயிலாக, கட்டுப்படுத்தப்பட்ட சீரான சூரிய வெளிச்சத்தில் உலர வைப்பதால், விளைபொருட்களில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன.
அவற்றின் நிறத்திலும் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. அதிக நாட்கள் வைத்திருந்தும் பயன்படுத்த முடியும்.
'காயத்ரி புட்ஸ்' என்ற பெயரில், இந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். என் தயாரிப்புகளுக்கு மஹாராஷ்டிரா, டில்லி, பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஏற்றுமதி நிறுவனங்கள் வாயிலாக அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறேன்.
மாதத்திற்கு குறைந்தபட்சம், 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறேன்; இதில் எல்லா செலவுகளும் போக, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தற்போதைக்கு குறைந்த அளவில் தான் உற்பத்தி செய்து வருகிறேன்.
இன்னும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம் ஈட்ட முடியும். உலர் காய்கறிகள் மற்றும் துாள் வகைகளுக்கு உலகம் முழுதும் பரவலாக தேவை இருக்கிறது.
இதனால், விவசாய குடும்பங்களைச் சேர்ந்த, 300 பெண்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்றை தற்போது துவங்கி இருக்கிறேன்.
மத்திய அரசின் பங்களிப்புடன், 4 கோடி ரூபாய் முதலீட்டில், உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழிலுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

