/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
12 ஏக்கர் பண்ணையில் ரூ.12 லட்சம் லாபம்!
/
12 ஏக்கர் பண்ணையில் ரூ.12 லட்சம் லாபம்!
PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் - நத்தம் கிராமத்தில், 12 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வரும், 'ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினராஜ சிங்கம்:
இலங்கையில், 1983ல் போர் ஆரம்பமானதும், அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நலனுக்காக, ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் துவங்கப்பட்டது.
அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, 1996ல் நிலம் வாங்கி, விவசாயம் செய்ய ஆரம்பித்தோம்.
இங்கு, 150 தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய்களை கொப்பரையாக மாற்றி, எண்ணெய் ஆட்டி விற்பனை செய்கிறோம். காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட பலவித காய்கறிகளை சுழற்சி முறையில் பயிர் செய்கிறோம். இந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள், எங்கள் பண்ணைக்கு வந்து வாங்கி செல்வர்.
பண்ணை துவங்கப்பட்ட நாளில் இருந்தே, 1 ஏக்கரில் சுருள்பாசி உற்பத்தி செய்து வருகிறோம். காய்கறிகளை விட இதில் பல மடங்கு புரதச்சத்து அதிகம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஈழ ஏதிலியர்களுக்கு கட்டணம் இல்லாமல் தருகிறோம். அவர்களின் தேவைக்கு போக, மீதியுள்ள சுருள்பாசியை விற்பனை செய்கிறோம்.
மேலும், 2,200 சதுர அடியில் மண்புழு உரம் தயாரிப்பு நிலையம் அமைத்துள்ளோம். எங்கள் பண்ணையில் ஜெர்சி கலப்பின மாடுகள் இருக்கின்றன. இவை தினமும் புல், பூண்டு, களைச் செடிகளை சாப்பிட வேண்டும் என்பதற்காக, 2 ஏக்கரை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்துகிறோம்.
தவிர, 400 நாட்டு கோழிகளும் வளர்க்கிறோம். இவற்றின் வாயிலாக கிடைக்கும் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் விற்பனையால் கணிசமாக வருமானம் கிடைக்கிறது. 25 நாட்டு வாத்துகளும், 15 பங்களா வாத்துகளும் வளர்க்கிறோம். அதன் முட்டைகளையும் விற்பனை செய்கிறோம்.
மேலும், 25 ஆடுகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலாக கிடைக்கும் குட்டிகளை வளர்த்தும் விற்பனை செய்கிறோம். அரை ஏக்கரில் குளம் அமைத்து, 'பங்காசியஸ்' மீன் வளர்க்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், பண்ணைக்கே நேரடியாக வந்து இந்த மீன்களை வாங்கி செல்வர்.
தேங்காய் எண்ணெய், சுருள்பாசி, காய்கறிகள், கீரை வகைகள், மண்புழு உரம் உள்ளிட்டவற்றின் விற்பனை வாயிலாக, எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிற ஈழ ஏதிலிய குடும்பங்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இந்த பணம் பயன்படுகிறது.
தொடர்புக்கு:98840 00413.
திருந்தியவர்கள் மீண்டும் குடித்ததாக சரித்திரமே இல்லை!
'குடி' நோயாளிகளை மீட்கும் பணியில், 70 வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றும், திருப்பூரைச் சேர்ந்த கலாதேவி சாமியப்பன்:'குடி' நோயாளிகளால், பல குடும்பங்கள் அனுபவிக்கும் நரக வேதனையை பார்த்து, ஒரு தாயாய், பாட்டியாய் வருந்தினேன்.
ஆரம்பத்தில், 'கணவன் குடிப்பழக்கத்தை கைவிட்டு திருந்த வேண்டும்' என, கடவுளிடம் வேண்டும் பெண்கள், ஒரு கட்டத்தில் அவனுடைய கொடுமைகள்
தாங்காமல், 'இவன் சீக்கிரம் போய் சேர வேண்டும்' என்று கதறி அழுவதுண்டு.
குடிக்கு அடிமையான அப்பாவிடம் அடி வாங்கி துடிக்கும் குழந்தைகளை, ஒரு பாட்டியாக பார்த்து கலங்கியிருக்கிறேன். அப்போது தான் என் கணவர், 'ஏ.ஏ.,' எனும், 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்ற குடி நோயாளிகளை திருத்தும் அமைப்பை பற்றி சொன்னார். இதில் சேர, கட்டணம் கிடையாது.
இதில் இணைந்து மீண்டவர்கள், தாங்கள் கண்மூடித்தனமாக குடித்தது, குடும்பத்தினரை சித்ரவதைப்படுத்தியது, இழந்த சொத்துகள், அவமானங்கள், திருந்திய பின் தங்கள் மனநிலை, குடும்பத்தினரின் நிம்மதி
ஆகியவற்றை எடுத்துச் சொல்வர்.
குடிக்கு அடிமையான பலரிடம் தொடர்ந்து பேசுவேன். 'குடிக்காமல் இருக்க முடியாது' என்று அடம் பிடித்தவர்களை, ஏ.ஏ., அமைப்பு மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டத்திற்கு அழைத்து போவேன்.அரங்கினுள் குடி நோயாளிகள் நுழைந்ததும், அனைவரும் ஆரவாரமாக கைதட்டி வரவேற்பர்; அப்போதே அவர்களுக்கு பாதி போதை தெளிந்து விடும்.ஏற்கனவே குடிப்பதை நிறுத்தியவர்கள், ஓராண்டு நிறைவடைந்த பின், 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்று கேக் வெட்டி கொண்டாடுவர். இந்த அமைப்பின் வாயிலாக திருந்தியோர், மீண்டும் குடித்ததாக சரித்திரமே இல்லை.
இவர்களுக்கு சமூகம் தரும் புதிய வரவேற்பு மற்றும் நன்மதிப்பால் மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களை திருத்த ஆயத்தமாவர். பல ஊர்களில் இருந்தும் பெண்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, தங்கள் கணவருடன் பேச வைக்கின்றனர்.
என் சேவையின் மகத்துவம் தெரியாத சிலர், 'பேசாமல் வீட்டுக்குள் இருக்காமல், இது என்ன தேவையில்லாத வேலை' என்பர்.
பிறருக்கு உதவும் மனம் கொண்ட என் கணவர், 'இதை பற்றியெல்லாம் கவலைப்படாதே... ஒரு குடும்பம் புனர்ஜென்மம் எடுக்க, இறைவன் நம்மை பணித்திருக்கிறார். இதை நாம் முழுமனதுடன் தொடர்ந்து செய்வோம்' என்பார்.
திருக்கோவிலுார் கபிலர் பண்பாட்டு கழகத்தினர், 'மதுவை வென்ற வீரநாயகி' என்ற பட்டமும், வெள்ளி பதக்கமும் வழங்கினர். பொதிகை தொலைக்காட்சியில் உரையாற்றியது, ஏ.ஏ., அமைப்பினர் மெடல் வழங்கி கவுரவித்தது எல்லாமே மறக்க முடியாத
நிகழ்வுகள்.தொடர்புக்கு: 99943 74548.