/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மஞ்சள் சாகுபடியில் ரூ.2.90 லட்சம் லாபம்!
/
மஞ்சள் சாகுபடியில் ரூ.2.90 லட்சம் லாபம்!
PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து லாபம் ஈட்டும், நெல்லை மாவட்டம், பிள்ளைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி: எங்கள் பகுதியில் மஞ்சள் சாகுபடி கிடையாது. இதனால், பொங்கல் சமயத்தில் மஞ்சள் குலைகளை எளிதாக விற்பனை செய்யலாம்.
அதிக விலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்குன்னு முடிவு செய்து, 2018ல் மஞ்சள் சாகுபடியில் இறங்கினேன். முதல் இரண்டு ஆண்டுகள், மஞ்சளை குலைகளாக தான் விற்பனை செய்தேன்.
அதன் பின் சோதனை முயற்சியாக, என்னிடம் உள்ள, 50 சென்ட் நிலத்தில், 10 சென்ட் நிலத்தில் விளைந்த மஞ்சள் கிழங்கை நன்கு முதிர்ச்சி அடையவிட்டு, அறுவடை செய்து பதப்படுத்தி, துாளாக மதிப்பு கூட்டினேன்.
இயற்கை முறையில் விளைவித்து உற்பத்தி செய்த மஞ்சள் துாள் என்பதால், நல்ல வாசனையாகவும், அதற்கான தனித்தன்மையுடனும் இருந்தது. கால் கிலோ, அரை கிலோ என பாக்கெட் போட்டு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எங்கள் ஊர் மக்களிடம் விற்பனை செய்தேன்; அதிக வரவேற்பு இருந்தது.
கடந்த 2020 முதல், 50 சென்ட் பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்து, அதில் 50 சதவீதத்தை குலைகளாகவும், மீதி 50 சதவீத மஞ்சளை துாளாகவும் விற்பனை செய்து வருகிறேன். ஆடி மாதம் விதைத்து, ஆறாவது மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில், 50 சதவீத குலைகளை அறுவடை செய்து விற்பனை செய்வேன்.
குலைகளை பொறுத்தவரை, பெரும்பாலான விவசாயிகள் எண்ணிக்கை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்வது வழக்கம். ஆனால், நான் சென்ட் கணக்கில் விலை நிர்ணயம் செய்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறேன்.
இந்த ஆண்டு 1 சென்ட் பரப்புக்கு 4,000 ரூபாய் வீதம், 25 சென்ட் பரப்பில் உள்ள மஞ்சள் குலைகளுக்கு 1,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.
வியாபாரிகள், தங்களின் சொந்த செலவில் வந்து அறுவை செய்து கொண்டனர். மீதி 25 சென்ட் பரப்பில் உள்ள குலைகளை மூன்று மாதத்துக்கு பின், அதாவது விதைப்பில் இருந்து 10வது மாதம் அறுவடை செய்து, அதை நான்கு நாட்கள் வெயிலில் காய வைத்து, அதன்பின் வேக வைப்போம்.
பின் இயந்திரம் வாயிலாக பாலீஷ் செய்து, துாளாக்கி விற்பனை செய்கிறேன். 25 சென்ட் பரப்பில் 1,080 கிலோ மஞ்சள் குலைகள் கிடைக்கும். அதை பதப்படுத்தி மதிப்பு கூட்டினால், 920 கிலோ மஞ்சள் துாள் கிடைக்கும். 1 கிலோ 300 ரூபாய் என விற்பனை செய்வதன் வாயிலாக, 2.76 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஆக, 50 சென்ட் மஞ்சள் சாகுபடி வாயிலாக, மொத்தம் 3.76 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில், 86,000 ரூபாய் செலவு போக, 2.90 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு:99521 29089

