/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உலகம் முழுதும் மாலைகள் ஏற்றுமதி செய்ய திட்டம்!
/
உலகம் முழுதும் மாலைகள் ஏற்றுமதி செய்ய திட்டம்!
PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

வெளிநாடுகளுக்கு பூ மாலைகளை ஏற்றுமதி செய்யும், திண்டுக்கல் மாவட்டம், மல்லையாபுரத்தைச் சேர்ந்த முருகன்: இதுதான் என் சொந்த ஊர். எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, அருகில் ஒரு நுால் மில்லில் ஒன்பது ஆண்டுகள் வேலை செய்தும் வருமானம் போதவில்லை.
பின், நண்பர் வாயிலாக, சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வேலை செய்தேன்.
நான் ஆர்வமாக இருந்ததை பார்த்த கடை உரிமையாளர், பூ கட்டுவதற்கு பழக்கப்படுத்தினார்.
ஓராண்டிலேயே, திருமண மாலை உட்பட அனைத்து வகை அலங்கார மாலைகளும் கட்டும் அளவுக்கு வளர்ந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்தேன். கொரோனா பரவலால், திண்டுக்கல்லைச் சேர்ந்த, 400 பேர், ஊர் திரும்பினோம்.
இயல்பு நிலைக்கு பின், சென்னைக்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்து, நண்பர்கள் உதவியுடன், இங்கேயே பூக்கடை துவங்கினேன்.
துவக்கத்திலேயே, இதில் வித்தியாசமாக செயல்பட நினைத்தேன். வழக்கமான மாலைகளாக அல்லாமல், புதுமையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
கோவில்களுக்கு சாமி மாலை, அலங்கார மாலைகள், மேடை அலங்கார செட்டுகள், பூங்கொத்துகள் செய்து கொடுத்தேன்.
பறித்தவுடன் மார்க்கெட்டுக்கு வரும் பூக்களை கொண்டு பிரெஷ்ஷாகவும், வித்தியாசமாகவும் மாலைகளை செய்து தருவதால், கடை துவங்கிய நான்கு ஆண்டுகளிலேயே, அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
தற்போது தினமும், 1,500 மாலைகளும், 30 வகையான திருமண மாலைகளும் தயாரித்து கொடுக்கிறேன்; கடையில், 40 பேர் வேலை செய்கின்றனர்.
இத்தொழிலில் சில நேரம் லட்சக்கணக்கில் லாபமும், சில நேரங்களில் ஆர்டருக்கான பணம் வருவதில் பிரச்னையும் இருக்கும்.
பல சவால்களும், ஏற்ற இறக்கங்களும் இருக்கும் சூழலிலும், பிடித்த தொழிலை செய்கிறோம் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.
நாகர்கோவில் அருகே கீழவண்ணான் விளை கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழாவிற்கு பிரமாண்டமான அலங்கார மாலை கேட்டனர்.
ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களை, நேர்த்தியாக கோர்த்து வடிவமைப்பது சிரமமான வேலை.
தங்க நகை செய்யும் நேர்த்தியில், 20 நாட்களாக, 100 கலைஞர்களை கொண்டு மாலை தயார் செய்தோம்.
இதேபோல், ஆப்பிள், அன்னாச்சி பழ மாலைகளையும் செய்து கொடுத்துஉள்ளேன்.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். உலக நாடுகள் முழுதும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளேன்.

