PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

சென்னை, மேற்கு மாம்பலத்தில் இயங்கி வரும், ‘எம்.கே.ராதாகிருஷ்ணன் அண்டு கோ’ நிறுவனம் வாயிலாக தின்பண்டங்கள், நொறுக்கு தீனிகளை மொத்தமாக விற்பனை செய்து வரும் ரஜினிஷ்:
அப்பா தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். குடும்ப சூழ்நிலையால் கேரளாவில் இருந்து, தன் 13 வயதில் சென்னைக்கு வந்தார். அந்த காலகட்டத்தில், உறவினர் ஒருவர் பெரிய கடைகளில் இருந்து தின்பண்டங்களை மொத்தமாக வாங்கி, மிதிவண்டியில் சென்று சிறிய கடைகளுக்கும், பேக்கரிகளுக்கும் வினியோகம் செய்து வந்தார்.
அவருக்கு உதவியாக இருந்த அப்பாவுக்கு ஒரு நாள், ‘நாமே தயாரித்து விற்பனை செய்தால் என்ன?’ என்று தோன்றியது. அப்போது, 1,500 ரூபாய் முதலீட்டில் பெரிய கனவுடன் இந்த தொழிலை ஆரம்பித்தார்; படிப்படியாக உற்பத்தி அதிகரித்தது. விற்பனை அதிகரித்த அளவுக்கு உற்பத்தியையும், முதலீட்டையும் அதிகரிப்பது என்ற அணுகுமுறையே, தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
தற்போது அப்பாவுக்கு 72 வயதாகி விட்டதால், அவரது மகன்களான நானும், என் சகோதரரும் தொழிலை கவனித்து கொள்கிறோம். ஆரம்பத்தில் எங்கள் கவனம், ‘சிப்ஸ்’ வகைகளில் தான் இருந்தது. பின், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப தின்பண்டங்களின் வகைகளை படிப்படியாக அதிகரித்தோம்.
பெரிய நிறுவனங்களின் வருகையால் போட்டியும் அதிகரித்தது. ஆனால், நாங்கள் எங்களது அடிப்படை கொள்கைகளான தரம், சுவை மற்றும் நியாயமான விலையை விட்டுக் கொடுக்கவில்லை.
தின்பண்டங்களை தயாரிக்கும்போது வரும் வெப்பம், புகையால், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சிரமம் ஏற்படக்கூடிய சூழல் உருவானது. அதனால், ஒரு கட்டத்தில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்தோம். தரத்தில் சமரசம் செய்து கொள்ளாத உற்பத்தியாளர்களை தேடி, அவர்களிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்கி விற்கிறோம்.
உதாரணமாக, ‘சிப்ஸ்’ தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கேரளா, பாலக்காடுடன் தொடர்புடையவை. எனவே, சென்னையில் தயாரிப்பதை விட, அந்த பகுதிகளில் தயாரிப்பதை வாங்கி வினியோகம் செய்வது, செலவை குறைக்க உதவுகிறது. இந்த அணுகுமுறையே, வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்க உதவுகிறது.
ஆரம்பத்தில் சில்லரை விற்பனையாக இருந்த எங்கள் கடை, மொத்த விற்பனை நிறுவனமாக மாறியது. இன்று மாதம் 15 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது; ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
தரமும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் குறையக்கூடாது என்ற இரண்டு அடிப்படை கொள்கைகளை, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவதில் தான் எங்களின் வெற்றி அடங்கி இருக்கிறது.
