/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நம்ம உணவை நாம தான் விளைவிக்கணும்!
/
நம்ம உணவை நாம தான் விளைவிக்கணும்!
PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

தமிழ் திரைப்பட நடிகர் அருண் பாண்டியனின் மகளும், தும்பை, அன்பிற்கினியாள் ஆகிய திரைப்படங்களின் கதாநாயகியுமான, கீர்த்தி பாண்டியன்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் உள்ள எங்களோட பூர்வீக கிராமத்தில் என்னோட தாத்தா, அத்தையெல்லாம் தொடர்ந்து விவசாயம் பண்ணிட்டு இருந்தாங்க.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் நானும், அப்பா அருண் பாண்டியனும், எங்களோட பூர்வீக கிராமத்துக்கு போயிட்டோம். அப்பதான் விவசாயம் செய்யத் துவங்கினோம். எங்களோட நிலத்தை சுத்தப்படுத்தி நிறைய மரங்களை நட்டு வைத்தோம். பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டோம்.
என்னோட தாத்தா விவசாயம் பண்ணிட்டு இருந்தாலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தான், எனக்கு விவசாயத்தில் நேரடி அனுபவம் ஏற்படத் துவங்கியது. எங்கள் தோட்டத்தில் நான் பார்த்து வளர்ந்த மரம், செடி கொடிகளில் இருந்து கிடைக்கிற உணவுப் பொருட்களை ஒருமுறை சாப்பிட்ட பின், விவசாயம் இன்னும் ரொம்ப பிடித்தமான ஒன்றாக மாறி விட்டது.
கடையில் வாங்கி சமைக்கும் உணவுகள் எனக்கு பிடிக்காமலே போயிருச்சு. விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு போகத் துவங்கினேன். நாம சாப்பிடுற உணவை நாம தான் விளைவிக்கணும் என்ற முடிவுக்கு வந்துட்டேன்.
இப்ப, எங்க பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களும், தென்னை, மா, கொய்யா, ஆரஞ்சு உள்ளிட்ட மரங்களும் செழிப்பா விளைஞ்சுட்டு இருக்கு. வெண்டை, கத்திரி, பூசணின்னு நிறைய காய்கறிகளும் பயிரிட்டிருக்கோம். இப்போது எங்ககிட்ட, 16 நாட்டு மாடுகள் இருக்கு.
குஜராத்தில் இருந்து காங்கிரேஜ் இனத்தைச் சேர்ந்த காளையும், இரண்டு பசு மாடுகளும் வாங்கிட்டு வந்தோம். அவங்க ரொம்ப மூர்க்கமானவங்க.
பழகுன மனுஷங்க தான் நெருங்கவே முடியும். முதல்ல ஒரு வாரம் சென்னையில் வைத்திருந்தோம். நான் கூடவே இருந்தேன்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு லாரியில் ஏத்திவிட்டு, நான் காரில் பின்னாடியே போனேன். ஒரு வாரம் நான்தான் பால் கறந்தேன். மெதுவாக மத்தவங்களும் பழகத் துவங்கிட்டாங்க.
எங்க பண்ணையில் மாடுகள் மட்டுமல்லாமல், ஆடுகள், குதிரைகளும் வளர்க்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும் கால்நடைங்கிறது எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரி. அதனால் அதுங்களை புதிதாக வாங்கி, எங்க குடும்பத்தில் இணைக்கும்போது நேரில் பார்த்து தான் வாங்குவோம்.
எங்க பண்ணையில் விளையக்கூடிய பொருட்களை நாங்கள் பயன்படுத்தியதோடு, நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுத்தோம். நாளுக்கு நாள் விளைச்சல் அதிகரிச்சுட்டே இருக்குறதால, இப்ப வெளியில் விற்பனை செய்யவும் துவங்கிட்டோம்.

