PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

'புட் ரெவ்யூ' சேனல்கள் சமூக வலைதளத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால், அதையே மாற்றி யோசித்து, மாஸ் காட்டி ஹிட் அடித்திருக்கும், திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையத்தைச் சேர்ந்த, ரூபி - ராஜா தம்பதி:
ரூபி: திருப்பூரில், ஒரே கார்மென்ட்ஸ் கம்பெனியில் இரண்டு பேரும் வேலை பார்த்தோம். நட்பு, காதலாக மாறியது. எனக்கு வேறு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ததால், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்.
கம்பெனியில் இருவரையும் வேலையில் வைத்துக் கொள்ள முடியாது என்று, அனுப்பி விட்டனர். கையில் இருந்த 1,000 ரூபாயில், வாழ்க்கையைத் துவங்கினோம். கணவருக்கு, 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.
அப்போது தான் கணவர், 'ஒரு புது சேனல் துவங்கி, நாம் இருவரும் சேர்ந்து, வீடியோ செய்யலாம்'னு ஐடியா கொடுத்தார். அப்போது தான், இந்த சேனலை துவங்கினோம். ஆரம்ப நாட்களில் வீடியோ எப்படி எடுப்பது என, சில யு டியூபர்களிடம் உதவி கேட்டோம்; பதில் வராது. என் வீட்டுக்காரர் தான், ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டார்.
ஆனால், கமென்ட்சில் எங்கள் உருவம், நிறம் என எல்லாவற்றையும் குறை சொல்லியபடியே இருப்பர். மனதை தளர விடவில்லை. எனக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம். அதனால் சாப்பிடுவதை வைத்து காமெடி செய்யலாம் என்ற புது 'கான்செப்ட்'டை கணவர் சொன்னார்; அதில் தான் ஜெயித்தோம்.
ராஜா: எங்கள் புட் வீடியோவை போட்ட ஒரு மணி நேரத்திலேயே, 2 லட்சம் பேர் பார்த்து விடுவர். ஆறே மாதத்தில், 10 லட்சம் 'சப்ஸ்கிரைபர்ஸ்' வந்தனர். தற்போது, 25.3 லட்சம் பேர் இருக்கின்றனர்.
'வீட்டில் சமைக்கவே மாட்டீங்களா, எப்ப பார்த்தாலும் ஹோட்டலில் தான் சாப்பிடுவீங்களா?' என்று கேட்டவர்களுக்காகவே, எங்களது தினசரி வாழ்க்கையையே வீடியோவா காண்பிக்கலாம் என்று, 'ராஜா ரூபி லவ் எக்ஸ்பிரஸ்' என்ற சேனலை துவங்கினோம்; அதற்கும், 10 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் ஆன் தி வே... தவிர, எங்கள் சேனலுக்கு, 21 விருதுகள் கிடைத்திருக்கின்றன.
ஆரம்பத்தில், 'இவர்கள் வீட்டில் நடப்பதை ஊரே பார்க்குது... ஏன் வீட்டில் நடப்பதை வீடியோவா போடுறாங்க' என்று உறவினர்களே பேச துவங்கினர்.
ஆனால், தற்போது எங்கள் வளர்ச்சியை பார்த்து, 'இவங்க எங்கள் சொந்தக்காரங்க, என் கூட வேலை பார்த்தவங்க, எங்க பிரெண்டு'ன்னு பெருமையாக சொல்லி கொள்கின்றனர்.
அன்று ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட நாங்கள், இன்று நிறைவாக இருக்கோம் எனில், அதற்கு விடாமுயற்சி மட்டுமே காரணம்!