PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM

திருப்பத்துார் மாவட்டம், ஒட்டப்பட்டி கிராமத்தில், 10க்கு 10 அறையில் இயங்கும், 'ஓம் சக்தி ஊறுகாய்' தொழிற்சாலை பற்றி கூறுகிறார், அதை துவக்கியதில் முக்கிய பங்கு வகித்த ராதிகா:
நான், 10வது படிச்சிருக்கேன்; என் கணவர் விவசாயக்கூலி. குடும்ப செலவுக்காக பீடி சுத்துற வேலை செஞ்சுட்டு இருந்தேன். 1,000 பீடி சுத்துனா, 200 ரூபாய் கிடைக்கும்.
குழந்தைங்க வளர வளர தேவைகள் அதிகமாச்சு. ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்த நேரத்தில், மகளிர் குழுக்களுக்கு ஊறுகாய் தயாரிக்க, இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்துனாங்க.
ஊறுகாய் தயாரிக்கிறது துவங்கி, அதை பிசினசாக மாத்துறது வரை எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க. பயிற்சி முடிஞ்சதும் குழுவில் கலந்து பேசினோம். 13 பேரில், ஒன்பது பேர் பிசினஸ் துவங்கத் தயாராக இருந்தனர்.
ஆளுக்கு, 10,000 ரூபாய் வீதம் மொத்தம், 90,000 ரூபாய் முதலீடு செய்து, இந்த பிசினசை துவங்கினோம்; இந்த இடத்தை வாடகைக்கு எடுத்தோம்.
மூலப்பொருள் வாங்குவது, ஊறுகாய் தயாரிப்பது, 'பேக்கிங்' செய்வது, விற்பனைக்கு எடுத்து செல்வது என, வேலைகளைப் பகிர்ந்து கொண்டோம். துவக்கத்தில் சின்ன கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்துட்டிருந்தோம்.
அப்புறம், தமிழகம் முழுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்காக வைக்கிற இலவச ஸ்டால்களிலேயும், எங்கள் பொருட்களை விற்க துவங்கினோம்.
மாங்காய், எலுமிச்சை, தக்காளி ஊறுகாய் வகைகளை எல்லாரும் செய்கின்றனர். இதெல்லாம் சீசனில் மட்டும் தான் விலை குறைவாக கிடைக்கும்.
நாங்கள் வாழைப்பூ, பிரண்டை, கறிவேப்பிலை ஊறுகாய்னு எல்லா சீசனிலும் மலிவாக கிடைக்கும் பொருட்களில் ஊறுகாய் தயாரிக்கிறோம்.
மூலப்பொருட்களை எங்கள் ஏரியா விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக வாங்குவதால், குறைவான விலைக்கு கிடைக்குது. எங்கள் ஊறுகாய்களின் ருசி பிடித்த சில வாடிக்கையாளர்கள் ரசப்பொடி, சாம்பார் பொடி என, மசாலா பொடி வகைகளும் கேட்க துவங்கினர்.
அதையும் தயார் செய்து விற்பனை செய்ய துவங்கினோம். பிசினசை, 'டெவலப்' செய்யலாம்னு அரசிடம், 50,000 ரூபாய் கடன் வாங்கினோம்.
எங்கள் பிராண்டுக் கென, 'லோகோ, பேக்கிங் பாக்ஸ்' தயார் செய்து களம் இறங்கியிருக்கோம். அகலக்கால் வைக்கக்கூடாது என்று, ஊறுகாய் வகைகளை 10 கிலோவாக தான் தயார் செய்கிறோம்.
அது விற்ற பின் தான், அடுத்த, 'பேட்ச்' தயார் செய்கிறோம். இப்போது மாதம், 150 கிலோ ஊறுகாயும், 20 கிலோ மசாலா பொடிகளும் தயாரிக்கிறோம்.
மாதம் அதிகபட்சம், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்கிறோம். பிசினஸ் துவங்க படிப்பு தடைஇல்லைன்னு நிரூபித்து உள்ளோம். கனவும், உழைப்பும் இருந்தால், வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயரலாம் என்பதற்கு நாங்களே உதாரணம்!

