/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஆதரவு கொடுங்க!
/
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஆதரவு கொடுங்க!
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஆதரவு கொடுங்க!
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஆதரவு கொடுங்க!
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

'ஸ்ரீ ரூபிகா கார்மென்ட்ஸ்' என்ற பெயரில், தையல் தொழில் நடத்தி வரும் திருச்சி, பொன் நகரைச் சேர்ந்த கயல்விழி: நான் பிறந்தது, பெரம்பலுார் மாவட்டம், அய்யர்பாளையம். வறுமை யான சூழல்.
ஏழாம் வகுப்பு படித்தபோதே, 'டெய்லரிங்' கற்றுக் கொண்டேன். 10ம் வகுப்புடன் படிப்பு நின்று போகவே, அக்கம், பக்கத்தினருக்கு தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.
உறவினரான சரவணனுக்கும், எனக்கும் திருமணம் முடிந்தது. அவர் டிரைவர்; குறைவான வருமானம். எனவே, நானும் துணி தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.
என் கணவர், 'நீ இதில் புதிதாக வந்துள்ள வற்றையும் கற்றுக் கொள்ள, அதற்கான வகுப்புக்கு செல்' என அனுப்பி வைத்தார்.
அத்துடன், டெய்லரிங்கில் டிப்ளமா கோர்ஸ் முடித்தேன். ஆனால், எனக்கு பவர் மெஷினை இயக்கத் தெரியவில்லை. எனவே, ஒரு கார்மென்ட்ஸில் வேலைக்கு சேர்ந்து அதை கற்றுக் கொண்டேன்.
நாளிதழ் வாயிலாக மாவட்ட தொழில் மையம் குறித்து தெரியவர, அங்கு சென்று, 2 லட்சம் ரூபாய் தொழிற்கடன் பெற்றேன். ஐந்து பவர் மிஷன்கள் வாங்கி, 2007ல் தொழில் ஆரம்பித்தேன். ஊழியர்களுக்கும் நானே கற்றுக்கொடுத்து, அவர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டேன்.
'ரெடிமேட்' கடைகளுக்கு மொத்தமாக தைத்துக் கொடுப்பது, அபார்ட்மென்ட்களில் ஆர்டர்கள் பெறுவது, நேரடி வாடிக்கையாளர்கள் என, எல்லா வகையிலும் ஆர்டர்களை பெற்றேன்.
பிளவுஸ், திருமண பிளவுஸ், ஆண்களுக்கான உடைகள், பள்ளி சீருடைகள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கான சீருடைகள் என்று பலவற்றையும் தைத்தோம்.
இங்குள்ள பிரபல ஜவுளி கடைகளுக்கு குறித்த நேரத்தில் தரமாகவும், நேர்த்தியாகவும் ஆர்டர்கள் முடித்துக் கொடுத்ததால், அவர்கள் வாயிலாக சென்னை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலும் தொடர் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
இணையதளத்தில் விளம்பரம் கொடுப்பது உள்ளிட்ட பல வழிகளிலும் புதிய வாடிக்கையாளர்களை கண்டடைந்து கொண்டே வந்தபோது தான், கொரோனா ஊரடங்கு வந்து, அனைத்தையும் முடக்கிப் போட்டு விட்டது.
ஊரடங்கின்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை களுக்கு, பி.பி.இ., கிட் எனும் கவச உடைகளை தைத்துக் கொடுத்தோம். தற்போது, 1,800 தொடர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறோம். இவற்றை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
கணவர் கொடுத்த நம்பிக்கையும், ஆதரவும் தான் இந்தளவுக்கு வளர காரணம். அதனால் குடும்பத்தில் தொழில் துவங்க நினைக்கிற தங்கள் வீட்டு பெண்களுக்கும் பலரும் ஆதரவு கொடுத்தால், உங்கள் வீட்டிற்குள்ளும் நிச்சயம் வெற்றி நுழையும்!